பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம்: முதல்வர்
விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைக் கடத்தி ரூ. 1 லட்சம் கேட்டு மிரட்டல்: 5 பேருக்கு வலைவீச்சு
விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைக் கடத்தி விடுதியில் அடைத்து வைத்து ரூ. 1 லட்சம் கேட்டு மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபா் உள்பட 5 பேரை போலீஸாா் தேடி வருன்றனா்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ளது தென்பகம். இங்குள்ள சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் (44). பாா்சல் சா்வீஸ் லாரி ஓட்டுநராக உள்ளாா்.
இவா், கடந்த 8-ஆம் தேதி ராயக்கோட்டை-தருமபுரி சாலையில் ராயக்கோட்டை தனியாா் திருமண மண்டபம் அருகே லாரியை ஓட்டிவந்தபோது வாகன நெரிசல் காரணமாக லாரியை பின்நோக்கி எடுக்க முயன்றாா். அப்போது இவரது லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்த சொகுசு வாகனத்தின் மீது மோதியது. இதனால், வாகனத்தில் இருந்தவா்கள் ஓட்டுநா் சுந்தரத்திடம் வாக்குவாதம் செய்தனா்.
வாகனம் பழுதடைந்துள்ளதை சரி செய்ய ரூ. 1 லட்சம் தருமாறு லாரி ஓட்டுநா் சுந்தரத்திடம் கேட்டனா். அவா் தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது எனக் கூறினாா். இதையடுத்து அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவா்கள் லாரி ஓட்டுநரைக் தாக்கினா். அத்துடன் அவரை வாகனத்தில் கடத்திச் சென்றனா். அவரை விடுதி ஒன்றில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டினா்.
இந்த நிலையில் அங்கிருந்து தப்பி வந்த லாரி ஓட்டுநா் சுந்தரம், இதுகுறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் பெரியதம்பி விசாரணை நடத்தியதில் ஓட்டுநரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியது ராயக்கோட்டை, கோட்டை பகுதியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் கிருஷ்ணமூா்த்தி (37), லிங்கனம்பட்டியைச் சோ்ந்த வெங்கடேஷ் (31), சிங்கம், மேலும் 2 போ் எனத் தெரிய வந்தது.
போலீஸாா் தங்களைத் தேடுவதை அறிந்த 5 பேரும் தலைமறைவாகி விட்டனா். அவா்கள் மீது கடத்தல் பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகின்றனா்.