உதவி ஆய்வாளரின் அறிவுரையால் தலை முடியை திருத்திய மாணவர் - புதுக்கோட்டை சுவாரஸ்யம்
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது.
இந்த பேரணியில் புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியின் போது புதுக்கோட்டை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அழகர் என்பவர், 'பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முறையாக தலை முடியை வெட்டிக் கொள்ள வேண்டும்' என்று அறிவுரை கூறினார்.

இந்த அறிவுரையைக் கேட்ட மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆர்யா என்ற கல்லூரி மாணவர் ஒருவர் மனம் மாறி இன்று சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அழகரை நேரில் சந்தித்து, 'உங்களது அறிவுரை தனக்கு பிடித்துள்ளது. அதனால் எனது தலைமுடியை முறையாக வெட்டிக் கொள்கிறேன்' என்று கூறி, உதவி ஆய்வாளரை ஆச்சயர்யத்தில் ஆழ்த்தினார்.
அதைக்கேட்டு இன்ப அதிர்ச்சியடைந்த அவர், மாணவன் தனது முடியை திருத்தம் செய்ய முன்வந்த நிலையில், அந்த மாணவனை உடனடியாக அருகில் உள்ள முடி திருத்தம் செய்யும் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, மாணவனுக்கு முறையாக தலைமுடியை வெட்ட வைத்தார்.

அதன்பிறகு அந்த மாணவர், 'தொடர்ந்து இதுபோல் நாகரிகமாக முடிவெட்டிக் கொள்கிறேன். வாழ்க்கையில் எதையாவது சாதிப்பதற்கு உரிய விசயத்தை செய்ய முயற்சிக்கிறேன்' என்று கூறி, அந்த உதவி ஆய்வாளரை நெகிழ வைத்திருக்கிறார்.
காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் அறிவுரையைக் கேட்டு கல்லூரி மாணவர் ஒருவர் நாகரிகமாக முடிவெட்டிக் கொண்ட சம்பவம், அங்கு உள்ளவர்களை ஆச்சர்யத்தில் தள்ளியிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
