Dandruff: `பொடுகு அதிகமா இருக்கா?' தலைக்கு எண்ணெய் வைக்கலாமா; மருத்துவர் சொல்வெதன்ன?
பெரும்பாலானோருக்குத் தலையில் பொடுகு அதிகமாக இருக்கும். உச்சந்தலையில் ஏற்படும் இந்தப் பிரச்னை மலாசீசியா எனப்படும் பூஞ்சையின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. இதனால் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும்.
இரண்டு வகையான பொடுகுத் தொல்லை உள்ளன. ஆரம்பத்திலேயே வெள்ளை நிறத்தில் இருக்கும் பொடுகுத் தொல்லையைப் பார்த்துவிட்டால் விரைவில் குணப்படுத்தலாம். அதுவே அதிகமானால் சிவப்பு நிறத்தில் மாறிவிடும் இதற்கு மாத்திரைகூட எடுத்துக்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் கோல்டா.

அதிகமாக பொடுகு இருந்தால் தலைக்கு எண்ணெய் வைக்கக்கூடாது என்றும் தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா எச்சரிக்கின்றார்.
மருத்துவர் கூற்றுப்படி, தலையில் அதிகமாக பொடுகு இருக்கும் பட்சத்தில் இரவு முழுக்க எண்ணெயைத் தேய்த்து வைக்கக்கூடாது. இதனால் பொடுகு அதிகமாக தான் செய்யும்.
தலைக்கு எண்ணெய் வைக்காவிட்டால், உலர்ந்த தலையைப் போன்று உணர்கிறீர்கள் என்றாலும், தலைவலி போன்ற பிரச்னை ஏற்படும் என்றாலும், உச்சந்தலையில் எண்ணையை தேய்க்காமல் முடியில் மட்டும் தேய்த்து வைத்து விட்டு குளிப்பது நல்லது.
பொடுகு தொல்லை இருப்பவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது தலைக்கு ஷாம்பூ பயன்படுத்த வேண்டும்.
பொடுகுக்கான ஷாம்புவைப் பயன்படுத்திவிட்டு இரவு முழுக்க உச்சந்தலையில் எண்ணெய் வைத்தால் அந்த ஷாம்பு பயனளிக்காது.
சீக்கிரமாகவே உச்சந்தலை எண்ணெய் பசை ஆகிவிடும் என்பவர்கள், தினமும் தலைக்குக் குளிக்கவேண்டும்.
பொடுகு தொல்லை அதிகம் இருப்பவர்கள் முகத்திற்கு தனி டவல், தலைக்கு தனி டவல் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் கோல்டா.