நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர்!
உத்தமபாளையத்தில் இளைஞர் கொலை!
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இளைஞர் ஒருவரை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்பு அருகே காலி வீட்டுமனை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி உத்தமபாளையம் காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக உடல்கூறாய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து உத்தமபாளையம் போலீஸாா் விசாரித்தனா். முதல் கட்ட விசாரணையில், இறந்தவர் உத்தமபாளையம் பி. டி .ஆர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சையது அபுதாஹிர் மகன் முகமது மீரான்(25). இவர் கடந்த சில நாள்களுக்கு முன் கம்பம் அருகே புதுப்பட்டியில் சக நண்பர்களால் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், முகமது மீரானை மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக, முகமது மீரானை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குடியிருப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.