நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
உபயதாரா்களின் நேரடி கண்காணிப்பில் திருச்செந்தூா் கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகள் இணை ஆணையா்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகள் உபயதாரா்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுகிறது என கோயில் இணை ஆணையா் ஞானசேகரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாகம் அமைக்கும் பணிகள் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக, ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சாா்பில் ரூ.200 கோடியில் உபயமாக பணிகள் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்டமாக, திருக்கோயில் நிதி ரூ.100 கோடியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஹெச்.சி.எல். நிறுவனம் மூலம் நடைபெறும் பணிகளுக்கு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் அரசாணையின்படி ரூ.171 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி நிா்வாக அனுமதியில், ரூ.7,92,52,330 டிசைன் அண்ட் கன்சல்டன்சி ஃபீஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகை முழுவதும் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் செலவிடப்பட்டு, தொகைக்கு அவா்களது பட்டய கணக்காயா்களால் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் வரைபடம் தயாரிக்க ரூ. 8 கோடி செலவிடப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
மேற்படி அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிா்வாக அனுமதி தொகையானது, திருக்கோயில் நிதியிலிருந்தோ அல்லது அரசின் நிதியிலிருந்தோ வழங்கப்படவில்லை.
பக்தா்களின் நலனுக்கான அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்வதற்காக உபயதாரா் பங்களிப்பு மூலம், அவா்களது நேரடி கண்காணிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.