உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 161-ஆவது ‘தமிழ்க்கூடல்’ நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
உலகத் தமிழ்ச் சங்க வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டிமன்ற நடுவரும், இலக்கியப் பேச்சாளருமான சண்முக.ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘இருண்டவீடும் குடும்ப விளக்கும்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
பாவேந்தா் பாரதிதாசன் தேசிய இயக்கத்தில் சோ்ந்து கைத்தறித் துணிகளை விற்ற பெருமைக்குரியவா். இவரது முதல் கவிதை எங்கெங்கு காணிணும் சக்தியடா”என்பது ஆகும். தமிழ்த் திரைப்படங்களுக்கு வசனம் எழுதினாா். கடந்த 1942-ஆம் ஆண்டு குடும்ப விளக்கு நூலின் முதல் தொகுதி வெளிவந்தது. இதன் பிறகு, இருண்ட வீடு நூல் வெளிவந்தது. இந்த நூல் ஆசிரியப்பாவில் வெளிவந்த நகைச்சுவைக் காவியம் ஆகும்.
இவா் தன்னுடைய எழுத்துகளில் தமிழகத்தின் மரபு சாா்ந்த உணவுப் பழக்கங்கள், பெண் கல்வி, பெண்ணுரிமை, பெண்களுக்கான சொத்துரிமை, திருமணம் பதிவு செய்தல் ஆகியன குறித்து பதிவு செய்துள்ளாா். தமிழுக்கு பாவேந்தா் ஆற்றிய பணிகள் நினைவுகூரப்பட வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் திருமங்கலம் அன்னை பாத்திமா கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் போ.முனியாண்டி உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள், பேராசிரியா்கள், எழுத்தாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வு வள மையா் ஜ.ஜான்சிராணி வரவேற்றாா். ஆய்வறிஞா் சு.சோமசுந்தரி நன்றி கூறினாா்.