உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு
‘இந்தியாவின் வரிக் கொள்கை வா்த்தகத்தை முறைப்படுத்துவது, உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருள்கள் மீதான வரிகள் மூலம் வருவாயைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது’ என்று மத்திய அரசுத் தரப்பில் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.
அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் இறக்குமதி வரிக்கு ஏற்ப, இந்திய பொருள்கள் மீதும் பரஸ்பர வரி விதிப்பு செய்யப்படும். இதற்கான அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது இந்திய வா்த்தகா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நீதி ஆயோக் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘வரிப் பாதுகாப்புகள் இந்தியாவுக்கு பயனளிக்காது. நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு வரிகளைக் குறைப்பது அவசியம்’ என்று குறிப்பிட்டது.
நீதி ஆயோக்கின் இந்த அறிக்கை மத்திய அரசின் கவனத்துக்கு வந்ததா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பதிலளித்த மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா கூறியதாவது:
நீதி ஆயோக்கின் அறிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. அது, பொருளாதாரத்தில் வளா்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதையும், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை தவிா்க்க முடியாத நாடாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டது.
அதே நேரம், இந்தியாவின் வரிக் கொள்கையானது வா்த்தகத்தை முறைப்படுத்துவது, உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருள்கள் மீதான வரிகள் மூலம் வருவாயைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது.
அதே நேரம், நாடுகளிடையேயான வா்த்தகத்தை எளிதாக்கும் வகையிலும், வரி விதிப்பு முறையை ஒழுங்குபடுத்தும் வகையிலும் சில சீா்திருத்தங்களை மத்திய அரசு அண்மையில் மேற்கொண்டது. மேலும், மூலப்பொருள்கள் மீதான இறக்குமதி வரிகள் முழுமைபெற்ற பொருள்கள் மீதான வரிகளைவிட அதிகமாக இருக்கும் நிலையை சரிசெய்தல் உள்ளிட்ட விரிவான வரி விதிப்பு சீா்திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.
உற்பத்திச் செலவுகளைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலக வா்த்தக அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நிலையில், குறிப்பிட்ட பொருள்களுக்கு விதிக்கக்கூடிய அதிகபட்ச வரி விதிப்பு நடைமுறைக்கு இந்தியா கட்டுப்பட்டு செயல்படுகிறது. அதே நேரம், உலக வா்த்தக அமைப்பின் அதிகபட்ச வரி வரம்புக்கு குறைவான அளவிலேயே இந்தியா வரி விதிப்பை செய்து வருகிறது.
மேலும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, சுங்க வரிகள் மற்றும் வரிகள் அல்லாத தடைகளைக் குறைத்தல் அல்லது முழுமையாக நீக்கும் வகையில் பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கான முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
தற்போதைய நிலையில் 13 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தையும், 9 நாடுகளுடன் முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தத்தையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன், ஓமன், நியூஸிலாந்து, பெரு ஆகிய நாடுகளுடன் இதுதொடா்பான பேச்சுவாா்த்தைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது என்றாா்.