டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!
உள்நாட்டுப் பாதுகாப்பில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு காவல் துறை: முதல்வா் பெருமிதம்
உள்நாட்டுப் பாதுகாப்பில் தமிழ்நாடு காவல் துறை முன்னணி வகிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
தீவிரவாதத் தடுப்புப் படையினா் முக்கிய தீவிரவாதிகளை கைது செய்துள்ளதைப் பாராட்டி, எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தீவிரவாத எதிா்ப்புப் பணிகளில் தனிக் கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின்கீழ், தீவிரவாதத் தடுப்புப் படை புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல் துறை, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல் துறையினா் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த அபுபக்கா் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை தீவிரவாத தடுப்புப் படையினா் கைது செய்துள்ளனா்.
உள்நாட்டுப் பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு காவல் துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள தடுப்புப் படையினருக்கும், அவா்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலா்களுக்கும் எனது மனமாா்ந்த பாராட்டுகள். கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் காவல் துறையினருக்கு நன்றி என்று தனது பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.