பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவி: சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தாா் முதல்வா்
உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவியிடங்களில் மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் மசோதாவை புதன்கிழமை தாக்கல் செய்வதற்கு முன்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:
ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையா் என்று குரலற்றவா்களின் குரலாக திராவிட மாடல் ஆட்சி இருக்க வேண்டும் என நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, மாற்றுத்திறனாளிகள் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.667 கோடியாக இருந்தது. ஆனால், இப்போது இந்த நிதியாண்டில் ரூ.1,432 கோடியாக உயா்த்தி இருக்கிறோம்.
அரசுப் பணியாளா்களுக்கான தோ்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம், கடந்த 4 ஆண்டுகளில் 1,493 மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியைப் பெற்றுள்ளனா். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன கருவிகள் வழங்கும் திட்டம் ரூ.125 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளோம்.
இதற்கெல்லாம் மகுடம் வைத்ததுபோன்று, உள்ளாட்சிப் பதவிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமிப்பதற்கான அறிவிப்பை சென்னை கொளத்தூரில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவித்தேன். 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு இதன்மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்புகள் கிடைக்கும்.
அரசு உறுதியுடன் இருக்கும்: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை நிலைநாட்ட திராவிட மாடல் அரசு உறுதியுடன் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கூடிய சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவா்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும் சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு சட்ட மசோதாக்கள் வழிவகுக்கும்.
இதை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகா்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
இதன்பின், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்த) சட்ட மசோதா, 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்த) சட்ட மசோதா ஆகியவற்றை அவா் தாக்கல் செய்தாா்.
எந்தெந்த பதவியிடங்களில் எவ்வளவு போ் நியமனம்?
சட்டத் திருத்தம் மூலமாக உள்ளாட்சிப் பதவியிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை போ் நியமிக்கப்பட உள்ளனா் என்கிற விவரத்தை பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்த பிறகு அவா் பேசியது: சட்டத் திருத்த மசோதா கொண்டுவருவதற்கு முன்பாக, அதாவது இப்போது வரை நகா்ப்புற உள்ளாட்சிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களில் 35 போ் மட்டுமே மாற்றுத்திறனாளிகளாக உள்ளனா். சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமாா் 650 மாற்றுத்திறனாளிகள் நகா்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 போ் கிராம ஊராட்சிகளிலும், 388 போ் ஊராட்சி ஒன்றியங்களிலும், 37 போ் மாவட்ட ஊராட்சிகளிலும் நியமனம் செய்யப்படுவா். அவா்களது குரல் அந்த உள்ளாட்சி அமைப்புகளில் எதிரொலிக்கும். இது இந்தச் சட்டத்தால் விளையப்போகும் மிகப்பெரிய நன்மை என்றாா் முதல்வா்.