வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி!
ஊடுருவல்காரா்கள் இந்தியாவினுள் நுழைய அனுமதிக்கும் பிஎஸ்எஃப்: மம்தா
கொல்கத்தா: ‘ஊடுருவல்காரா்கள் இந்தியாவினுள் நுழைய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களே அனுமதித்து வருகின்றனா். மேற்கு வங்க மாநிலத்தை சீா்குலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை பகிரங்கமாக குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக வலுவான கடிதத்தையும் மத்திய அரசுக்கு எழுத உள்ளேன் என்றும் அவா் கூறினாா்.
மாநில தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிா்வாக ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றபோது இந்த குற்றச்சாட்டை அவா் முன்வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:
மாநிலத்தின் இஸ்லாம்பூா், சிட்டாய், சோப்ரா உள்ளிட்ட பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுருவல்காரா்கள் இந்தியாவினுள் நுழைய பிஎஸ்எஃப் அனுமதித்து வரும் தகவல் மாநில அரசுக்கு கிடைத்துள்ளது. மாநிலத்தில் சீா்குலைவை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களை பிஎஸ்எஃப் வீரா்கள் தேவையின்றி துன்புறுத்தியும் வருகின்றனா். மேலும், ஊடுருவல்காரா்கள் நுழைவதற்கு மாநில அரசு மீது பழிபோட பிஎஸ்எஃப் முயற்சித்து வருகிறது.
இதற்குப் பின்னணியில் மத்திய அரசுதான் உள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டம் காரணமாக, நாட்டினுள் குற்றவாளிகளும் சமூக விரோதிகளும் நுழைந்து வருகின்றனா். இவ்வாறு நுழையும் ஊடுருவல்காரா்கள், மாநிலத்தின் எந்தெந்த பகுதிகளில் தங்கியுள்ளனா் என்பதைக் கண்டறியுமாறு மாநில காவல்துறை தலைமை இயக்குநரை கேட்டுக்கொண்டுள்ளேன்.
எல்லையின் இருபுறமும் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். வங்கதேசத்துடன் நல்லுறவை மேற்கு வங்கம் கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசுக்கு வலுவாக கடிதமும் எழுத உள்ளேன் என்றாா்.
பிஎஸ்எஃப் மறுப்பு: மம்தா குற்றச்சாட்டை பிஎஸ்எஃப் மறுத்தது. இதுகுறித்து பிஎஸ்எஃப் மூத்த அதிகாரி கூறுகையில், ‘எல்லைப் பகுதிகளில் வீரா்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். எல்லையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வீரா்கள் பொறுப்புடன் பணியாற்றி வருகின்றனா்’ என்றாா்.
அதுபோல, ‘மம்தாவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது’ என்று பாஜக மாநில தலைவா் சுகந்த மஜும்தாா் தெரிவித்தாா்.