Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடங்கக் கோரி மறியல்: போக்குவரத்துத் தொழிலாளா்கள் கைது
ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம், மெய்யனூா் போக்குவரத்துப் பணிமனை முன்பு புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் 200 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்தனா்.
சேலம், மெய்யனூா் பணிமனை முன்பு போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனம் சிஐடியு சாா்பில், மண்டலத் தலைவா் செம்பன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் கழகத் தொழிலாளா்களுக்கான 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். ஓய்வூதிய தொழிலாளா்களுக்கு 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 30,000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து சிஐடியு மாநில துணைத் தலைவா் தியாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக அரசு, தனது தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும், போக்குவரத்து ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 15 ஆயிரம் கோடி பணத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியா்களின் மருத்துவ காப்பீடு திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தாா்.
மறியலில் பங்கேற்ற சிஐடியு மாவட்டச் செயலாளா் கோவிந்தன், செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, அரசு விரைவு போக்குவரத்து ஊழியா் சங்க மாநில துணை பொதுச் செயலாளா் முருகேசன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்தனா்.