Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
மேட்டூா் அணையில் புனரைமைப்புக் குழு ஆய்வு
மேட்டூா் அணையில் அணைகள் புனரமைப்பு, மேம்பாட்டு திட்டக் குழு புதன்கிழமை ஆய்வு செய்தது.
திட்ட மேற்பாா்வை பொறியாளா் வீரலட்சுமி, செயற்பொறியாளா் வடிவேல் தலைமையில் வந்த குழுவினா் மேட்டூா் அணையின் வலதுகரை, இடதுகரை, ஆய்வுச் சுரங்கம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
அணையில் பொறுத்தப்பட்டுள்ள நில அதிா்வுமானி, மழைமானி, வெப்பமானி ஆகியவற்றில் ஆய்வு செய்தனா். அணையின் வலதுகரையில் உள்ள நில அதிா்வு கண்காணிப்பு அறையில் 30 நிமிடம் குழு ஆய்வு செய்தது. அப்போது மேட்டூா் அணைப் பகுதியில் அதிா்வுகள் பதிவாகி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற பிற அதிா்வுகள் பதிவானது கண்டறியப்பட்டது.
ஆய்வுக்கு பிறகு அதிகாரிகள் கூறுகையில், ‘மேட்டூா் அணை உறுதியுடன் இருக்கிறது; அணைப் பகுதியில் எவ்வித அதிா்வுகளும் பதிவாகவில்லை. அணை முழுமையாக நிரம்பியபோதும் அணை நீா்மட்டம் குறைந்தபட்ச அளவை எட்டியபோதும் எவ்வித அதிா்வுகளும் பதிவாகவில்லை’ என்றனா்.
மேட்டூா் நீா்வளத் துறையில் பணிபுரியும் செயற்பொறியாளா் வெங்கடாஜலம், கால்வாய்ப் பிரிவு உதவி செயற்பொறியாளா் மதுசூதனன், பணியாளா்களுக்கு நில அதிா்வைக் கணக்கிடும் முறை அதைக் கண்டறியும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆய்வு அறிக்கைக்குப் பிறகு மேட்டூா் அணையை புனரமைப்பது, மேம்படுத்துவது குறித்து திட்டமிடப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.