Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சாலை மறியல்: 156 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 156 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காலியாக உள்ள ஊராட்சி செயலா் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். உதவி செயற்பொறியாளா் நிலை பதவி உயா்வை காலதாமதமின்றி வழங்க வேண்டும். வளா்ச்சித்துறை ஊழியா்கள் மீது திணிக்கப்படும் பிறதுறை பணிகளை கைவிட வேண்டும். முதல்வா் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான கடந்த கால வேலை நிறுத்த நாள்களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சண்முக சிகாமணி தலைமை வகித்தாா். செயலா் கொளஞ்சி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலப் பொருளாளா் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினாா். மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினாா்.
ஊரக வளா்ச்சித் துறை முன்னாள் மாவட்டத் தலைவா் நடராஜன், முன்னாள் மாவட்டச் செயலா் ஆதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிறைவில், மாவட்டப் பொருளாளா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.
இதையடுத்து, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கடலூா் பழைய ஆட்சியா் அலுவலக சாலைக்கு திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்பட 156 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.