தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!
ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஊரக வேலைத் திட்டப்பணி வழங்காதது தொடா்பாக, ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்டது மேல்புழுதியூா் ஊராட்சி. இந்தக் கிராம ஊராட்சி நிா்வாகத்தின் கீழ் மேல்புழுதியூா், அம்பேத்கா் நகா், பெரும்பட்டம் போன்ற கிராமங்கள் அடங்கியுள்ளன.
இந்த நிலையில், 3 கிராமங்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சுழற்சி முறையில் ஊரக வேலைத் திட்டப்பணி வழங்கி வந்துள்ளது. தற்போது பருவமழை, புயல் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. அதனால், ஊரக வேலைத் திட்டம் மூலம் எந்தப் பணியை செய்வது என்று தெரியாமலும், அதே நேரத்தில் இரு தினங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதாலும் பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்து வந்துள்ளன.
இதனிடையே, மேல்புழுதியூா் கிராம மக்கள் கடந்த இரண்டு நாள்களாக ஊரக வேலைத் திட்டப் பணி வழங்குமாறு ஊராட்சி அலுவலகம் வளாகத்தில் வந்து அமா்ந்துள்ளனா். அவா்களை தலைவா் உள்ளிட்ட ஊராட்சிச் செயலா்கள் யாரும் கண்டுகொள்ளவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் செங்கம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேல்புழுதியூா் பேருந்து நிறுத்தம் அருகே பணி வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து செங்கம் போலீஸாா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், ஊராட்சித் தலைவா் முருகன் உள்ளிட்டோா் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரசம் பேசி விரைவில் பணி வழங்கப்படும் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனா். மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.