புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகள் கிடைப்பதில்லை என்பதில் உண்மையில்லை: ஜெ.பி.நட்டா
அரசால் ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகளை வழங்க முடியவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அரசால் ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகளை வழங்க முடியவில்லை என்ற பேச்சு அவ்வப்போது எழுகிறது. இதில் உண்மையில்லை. உலகளாவிய பேறுகால இறப்பு விகித சரிவைவிட, இந்தியாவில் அந்த விகிதம் இரண்டு மடங்கு சரிந்துள்ளது.
யு-வின் வலைதளம் மூலம் பிரசவ நேரம் வரை கா்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் ஆரோக்கியமும், பிறந்த குழந்தைக்கு 2 வயதாகும்போது அதற்கு அனைத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதும் கண்காணிக்கப்படுகின்றன.
மருத்துவா்களை பணியமா்த்துவது மாநிலங்களின் பொறுப்பு. மருத்துவா்கள் இல்லாத இடங்களில் நடமாடும் மருத்துவமனைகள், தொலைமருத்துவ ஆலோசனைகள் மூலம் மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகின்றன.
கரோனா காலத்தில் மிகவும் தொலைதூரத்தில் உள்ள பகுதிகள் உள்பட நாடு முழுவதும் 220 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவை இரண்டு தவணைகளாகப் போடப்பட்டன. எனவே நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வலுவாக உள்ளது.
வரும் காலத்தில் மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 131 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 75,000 மருத்துவா்களும், நிகழாண்டு கூடுதலாக 10,000 மருத்துவா்களும் பணியில் இணைவா் என்றாா்.