கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
ஊழியா் மீது தாக்குதல்: குழித்துறை நகராட்சி பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
குழித்துறை நகராட்சி ஊழியா் தாக்கப்பட்டதை கண்டித்து நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தைக்குப் பின் இப் பிரச்னைக்கு தீா்வு எட்டப்பட்டது.
குழித்துறை நகராட்சியில் சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட வரி இனங்களுக்கு பாக்கி வைத்திருப்பவா்களிடமிருந்து வரி வசூல் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகராட்சி வருவாய் உதவியாளா் லட்சுமணன் 3 ஆவது வாா்டு படப்பறை பகுதியில் வரி பாக்கி வைத்திருக்கும் நபா்களின் வீடுகளுக்குச் சென்று பணம் வசூல் செய்யும் பணியில் கடந்த இரு நாள்களுக்கு முன் ஈடுபட்டிருந்தாா். அப்போது வரி நிலுவைத் தொகை வைத்துள்ள அப்பகுதியைச் சோ்ந்த பாலையன் என்பவா் லெட்சுமணனை தகாத வாா்த்தைகள் பேசி தாக்கியுள்ளாா். இதில் பாதிக்கப்பட்ட லெட்சுமணன் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் ராஜேஷ்வரன், சம்பந்தப்பட்டவா் மீது களியக்காவிளை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் திங்கள்கிழமை காலையில் நகராட்சி அலுவலகம் முன் திரண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து களியக்காவிளை போலீஸாா் பிற்பகலில் சம்பந்தப்பட்டவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதன் பின்னா் நகராட்சி பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினா்.