Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
எதிர்கால மனிதவளத்தை அழித்துக்கொண்டிருக்கும் போதைப் புழக்கம்... பிள்ளைகள் பத்திரம் பெற்றோர்களே!
சென்னையில், பெண்கள் விடுதியில் தோழிகளுடன் இரவு முழுக்க மது அருந்திய 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் மறுநாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூராய்வுக்குப் பின்னரே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும்.
போதைப் பழக்கம்... எந்தளவுக்கு நம் பிள்ளைகளை வாரிச்சுருட்டிக் கொண்டிருக்கிறது என்பதற்கான அபாய மணி இது. முன்னரெல்லாம் குடி நோயாளிகள் என்பவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். பின்னர், ‘சோஷியல் டிரிங்கிங்’ கலாசாரம் 40 வயதுக்காரர்களையும் குற்ற உணர்வின்றி மதுப்பழக்கத்துக்கு அழைத்துச் சென்றது. தொடர்ந்து, 30 வயதுகளில் இருக்கும் ஒருவர் குடிப்பழக்கம் இல்லாதவராக இருந்தால் அவர் அரிதானவராகப் பார்க்கப்படும் அளவுக்கு நிலை மாறியது.
இன்றோ, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம்கூட சர்வ சாதாரணமாக மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் புழங்குவது... மிகப்பெரிய ஆபத்து, அச்சுறுத்தல். உலகமயமாக்கல், கால மாற்றம், கலாசார மாற்றம் என்றெல்லாம் இதில் சாக்கு சொல்வது, ஏற்றுக்கொள்ளக் கூடாதது.
உலக அளவில் இந்தியாவும், இந்திய அளவில் தமிழ்நாடும் பல தளங்களிலும் முன்னேற்றப் பாதையில் செல்ல முக்கியக் காரணம்... மனிதவளம். ஆனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது சமுதாயத்தில் பரவிக்கொண்டிருக்கும் போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தாமல், ‘கமிஷன்’ வாங்கிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் அரசு துறையினர். நம் பிள்ளைகள் அதில் விட்டில் பூச்சிகளாக விழுந்துகொண்டிருக்கிறார்கள். எனில், எதிர்காலத்தில் நம்மிடம் மிஞ்சப்போவது மனிதவளம் அல்ல, போதை அடிமைகளே.

`கூல் லிப்’ தொடங்கி பள்ளி மாணவர்களிடம் அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம் பற்றி ஆசிரியர்கள் கதறுகிறார்கள். கல்லூரி வளாகத்திலேயே போதைப் பொருள்கள் விநியோகம், பறிமுதல் என்ற செய்திகளை நாம் ஆரம்பத்தில் கேட்டபோது இருந்த அதிர்ச்சி இப்போது விலகியுள்ள அளவுக்கு, அது வாடிக்கை செய்தியாகி இருக்கிறது.
2020-ம் ஆண்டு 10 இந்திய நகரங்களில், 8 - 12-ம் வகுப்பு படித்த 6,000 மாணவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் 10% மாணவர்கள் புகையிலை, மது, கஞ்சா, ஹெராயின், பிரவுன்சுகர், சிலவகை வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. தேசிய போதையாளர்கள் சிகிச்சை மையம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 52% மாணவர்கள், 48% மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த எண்ணிக்கை இப்போது பல மடங்கு அதிகரித்திருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசு, இதில் இரும்புக்கர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய உச்ச நேரமிது.
தோழிகளே... நம் வீடும் இந்தச் சமூகத்தில்தான் இருக்கிறது. நம் குழந்தைகள் மீதான நம்பிக்கை என்பது, அவர்கள் மீதான நம் கண்காணிப்பில் விழும் ஓட்டையாகிவிடக் கூடாது எப்போதும். பிள்ளைகள் பத்திரம்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்