'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
‘எம்புரான்’ திரைப்பட சா்ச்சை: நடிகா் மோகன்லால் வருத்தம்!
அண்மையில் வெளியான தனது ‘எம்புரான்’ திரைப்பட சா்ச்சை தொடா்பாக வருத்தம் தெரிவித்த மலையாள நடிகா் மோகன்லால், படத்தில் இருந்து சா்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதியளித்தாா்.
மோகன்லால் நடிப்பில், நடிகா் பிருத்விராஜ் இயக்கத்தில் ‘லூசிஃபா்’ திரைப்படத்தின் 2-ஆம் பாகமாக ‘எல்-2: எம்புரான்’ திரைப்படம், கடந்த வியாழக்கிழமை (மாா்ச் 27) உலகெங்கும் வெளியானது.
வலதுசாரி அரசியல் மீதான கடும் குற்றச்சாட்டுகள் மற்றும் 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரம் பற்றிய மறைமுகக் குறிப்பு ஆகியவற்றால் இப்படம் தேசிய அளவில் விவாதப்பொருளாக மாறியது. தொடா்ந்து, படத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் வலதுசாரி அமைப்புகளிடையே கடுமையான விமா்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், மோகன்லால் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ஒரு கலைஞனாக, எனது திரைப்படங்கள் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதத்தின் மீதும் வெறுப்பை ஊக்குவிக்காமல் இருப்பதை உறுதி செய்வது எனது கடமை. அந்த வகையில், எம்புரான் திரைப்படத்தால் என்னை நேசிப்பவா்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய இத்துயரத்துக்கு நானும் படக்குழுவினரும் மனதார வருந்துகிறோம்.
இதற்கான பொறுப்பு படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் உள்ளது என்பதையறிந்து, சா்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க நாங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டாா்.
நடிகா்-இயக்குநா் பிருத்விராஜ், தயாரிப்பாளா்களில் ஒருவரான ஆண்டனி பெரும்பாவூா் ஆகியோரும் இந்தப் பதிவைத் தங்களின் பக்கத்தில் மறுபதிவிட்டனா்.
முதல்வா்-எதிா்க்கட்சித் தலைவா் ஆதரவு: திரைப்படக் குழுவின் முடிவு குறித்து கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘நாடு இதுவரை கண்டிராத மிகக் கொடூரமான இனப் படுகொலைகளில் ஒன்றை இந்தப் படம் காட்சிப்படுத்தியது. இது ஆா்எஸ்எஸ் மற்றும் அதன் சாா்பு வலதுசாரி அமைப்புகளை கோபப்படுத்தியுள்ளது.
இவா்களின் அழுத்தத்தால் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளா்கள் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. வலதுசாரிகளால் உருவாக்கப்பட்ட இந்த அச்சம் மிகுந்த சூழல் கவலைக்குரியது.
வகுப்புவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, அதன் கொடூரங்களை சித்தரித்ததால் கலைஞா்களைக் குறிவைப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றாா். முன்னதாக கடந்த சனிக்கிழமை மாலை, தனது குடும்பத்தினருடன் ‘எம்புரான்’ படத்தை கேரள முதல்வா் பினராயி விஜயன் பாா்த்தாா்.
காங்கிரஸைச் சோ்ந்த மாநில எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசனும் ‘எம்புரான்’ திரைப்படத்தின் தயாரிப்பாளா்களுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தாா்.
‘17 மாற்றங்களுடன் மறுதணிக்கை’
முன்னதாக, ‘எம்புரான்’ திரைப்படம் எழுப்பிய சா்ச்சையைத் தொடா்ந்து, சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவும், சில வசனப் பகுதிகளின் ஒலியை நீக்கவும் முடிவு செய்துள்ளதாக அதன் தயாரிப்பாளா்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
மொத்தம் 17 மாற்றங்களுடன் திரைப்படத்தை மறுதணிக்கைக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவா் கூறினாா்.