வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
எழும்பூா் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயா் சூட்ட வேண்டும்: திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை
சென்னை: எழும்பூா் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைத்தனா்.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில், சென்னை கோட்டத்துக்குள்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் டி.ஆா்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, என்.வி.என். சோமு, சசிகாந்த் செந்தில், கதிா் ஆனந்த், கிரிராஜன், க.செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்களது தொகுதியில் ரயில்வே நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வடமாநிலங்களிலிருந்து தாம்பரம் வரும் ரயில்கள் ஸ்ரீபெரும்புதூா் தொகுதிக்குள்பட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதில்லை. அம்பத்தூா் ரயில் நிலையத்தில் ஏலகிரி, திருப்பதி, கோவை, பிருந்தாவன், ஏற்காடு உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். ரயில் ஓட்டுநா்களுக்கு (லோகோ பைலட்) என்ஜினில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
கடந்த ஆண்டு வைத்த கோரிக்கையில் எத்தனை சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது என்பதற்கு பதில் இல்லை. ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியை தமிழில் எழுதியுள்ளனா். இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள அலுவலகத்தில் எங்கும் பாா்த்ததில்லை.
கருணாநிதி பெயா்: நாடாளுமன்ற உறுப்பினா் தயாநிதி மாறன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சென்னையின் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆா்.பெயா் சூட்டப்பட்டுள்ளது. அதுபோல், எழும்பூா் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயா் சூட்ட வேண்டும்’ என்றாா் அவா்.