ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள்!
தொடர் விடுமுறையைக் கொண்டாட சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பிரதேசத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக அரசு விடுமுறை, வார இறுதி நாள்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் நேற்றிலிருந்து மூன்று நாள்கள் அரசு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று முதலே ஏற்காட்டில் குவிந்தனர். இன்று காலையும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காடு வந்ததால் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எங்குப் பார்த்தாலும் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல், சுற்றுலாவுக்கு வந்தவர்கள் வாகனங்களை நிறுத்துமிடத்தைத் தேடுவதற்கே அதிக நேரமானது.
ஏற்காடு மலைப்பாதையில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வந்ததால் ஏற்காடு அண்ணா பூங்கா சாலை மற்றும் ஏரி பூங்கா சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாக ஒரே இடத்தில் வாகனங்கள் சிக்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்று முன்கூட்டியே காவல்துறையினர் போக்குவரத்தில் மாற்றம் செய்திருந்தால் இத்தகைய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்காது என்பது சுற்றுலா பயணிகளின் கருத்தாக உள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் அத்தியாவசிய தேவைக்காக கூட வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது.
23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!
மேலும் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்கு முதல்வர் வருகை புரிந்திருந்தால் ஏற்காட்டில் உள்ள போலீஸார் பாதுகாப்பு பணிக்காக சேலம் அழைத்துச் செல்லப்பட்டனர். எனவே, ஏற்காட்டில் காவலர்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மூன்று நாள் தொடர் விடுமுறை விடுமுறையால் ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிவார்கள் என்று நன்கு அறிந்த மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து காவலர்களை முதல்வர் பாதுகாப்பு பணிக்கு அழைத்து சென்றதே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.