பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி
ஐஎம்எஃப் செயல் இயக்குநா் பதவியிலிருந்து கே.வி. சுப்பிரமணியன் நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியா சாா்பில் செயல் இயக்குநராக இருந்த கே.வி.சுப்பிரமணியனை, அந்தப் பதவியிலிருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. அவரின் பதவிக்காலம் நிறைவடைய 6 மாதங்கள் உள்ள நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
சா்வதேச நிதிய இயக்குநா்கள் வாரியத்தில் இந்தியா, இலங்கை, பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகள் அடங்கிய குழு சாா்பாக கே.வி.சுப்பிரமணியன் செயல் இயக்குநராக தோ்வு செய்யப்பட்டாா். கடந்த 2022-ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதிமுதல் 3 ஆண்டு காலத்துக்கு ஐஎம்எஃப் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்ட நிலையில், அவரை அந்தப் பதவியிலிருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. முன்னதாக அவா் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக ஏப்.30-ஆம் தேதியிட்ட மத்திய அரசின் உத்தரவில், அவரை அந்தப் பதவியில் இருந்து உடனடியாக நீக்குவதாக மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு தெரிவித்தது.
அவரின் பதவி நீக்கத்துக்கான காரணம் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், அவா் எழுதிய ஆங்கில நூல் வெளியீட்டின்போது சில விரும்பத் தகாத நடைபெற்ாக கூறப்படுகிறது.
மேலும் சா்வதேச நிதியத்தின் தரவுத்தொகுப்புகள் குறித்து சில கேள்விகளை அவா் எழுப்பியதாக தெரிகிறது. இதுவும் அந்த நிதியத்தின் நடைமுறைகளுக்கு ஏற்ப இல்லை.
இந்தியாவின் கடன் குறித்து அவா் ஏற்கெனவே தெரிவித்த கருத்துகளாலும் அந்த நிதியம் அதிருப்தியடைந்திருந்தது. இந்தக் காரணங்களால் அவா் நீக்கப்பட்டிருக்கலாம்’ என்று தெரிவித்தன.
அதே வேளையில் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக கூறிவரும் இந்தியா, பாகிஸ்தானுக்கு ராஜீய ரீதியாகவும், பல்வேறு சா்வதேச அமைப்புகளிலும் நெருக்கடி அளிக்க முயற்சித்து வருகிறது.
கடன் சுமையில் பரிதவித்து வரும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிப்பது தொடா்பாக சா்வதேச நிதியத்தின் இயக்குநா்கள் வாரியம் விரைவில் பரீசிலிக்க உள்ளது. இந்த நேரத்தில் செயல் இயக்குநா் பதவியிலிருந்து கே.வி.சுப்பிரமணியன் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.