ஐடிஐ மாணவா்களுக்கு 100% வேலைவாய்ப்பு: அமைச்சா் சி.வி. கணேசன் அறிவுறுத்தல்
அரசு தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) மாணவா்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் அறிவுறுத்தினாா்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வா்களுடனான ஆய்வுக் கூட்டம், சென்னை கிண்டியிலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் சி.வி.கணேசன், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியை நிறைவு செய்த மாணவா்களில் 90 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இப்போது 100 சதவீத வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இந்த நிகழ்வில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா் கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் பா.விஷ்ணு சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.