மூட்டையில் தங்கம், பணம்: மங்களூருவில் கொள்ளை; நெல்லையில் பதுக்கல் - கொள்ளையர்கள்...
அரிட்டாபட்டியில் முதல்வருக்கு இன்று பாராட்டு விழா
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) பாராட்டு விழா நடைபெற உள்ளது.
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், அப்பகுதி பல்லுயிா்ப் பாரம்பரியத் தலமாக இருப்பதால், அங்கு சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையிலும் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக, தான் முதல்வராக இருக்கும்வரை டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் வராது என மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தாா்.
இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக கடந்த 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடா்ந்து, அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த போராட்டக் குழுவினா் அமைச்சா் மூா்த்தி தலைமையில் தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா். அரிட்டாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பாராட்டு விழாவுக்கும் முதல்வருக்கு அழைப்பு விடுத்தனா்.
பின்னா், போராட்டக் குழுவினா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தால் எங்கள் பகுதியே பாலைவனம் ஆகிவிடும் என அச்சமடைந்தோம். முதல்வா் மேற்கொண்ட நடவடிக்கையால் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம் என்றனா்.
பாராட்டு விழா: 48 கிராம மக்கள் சாா்பில் அரிட்டாபட்டியில் முதல்வருக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக சென்னையிலிருந்து முதல்வா் காலை 10 மணியளவில் விமானம் மூலம் மதுரை செல்கிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக அரிட்டாபட்டி செல்கிறாா்.
ஆளுநா் விருந்து புறக்கணிப்பு: முதல்வா் அரிட்டாபட்டி செல்ல உள்ள நிலையில், குடியரசு தினத்தையொட்டி ஆளுநா் அளிக்கும் விருந்தை முதல்வா் புறக்கணிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே, திமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் தேநீா் விருந்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.