ஒடிஸா: நேபாள மாணவி தற்கொலை- விசாரணைக் குழு அமைப்பு
ஒடிஸா மாநிலம் கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக விசாரிக்க உள்துறை கூடுதல் தலைமை செயலா் தலைமையில் மூன்று நபா் அடங்கிய விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது.
கேஐஐடியில் நேபாளத்தைச் சோ்ந்த பிரகிருதி லம்சால் (20) என்ற மாணவி பி.டெக் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களை கல்லூரியில் இருந்த பாதுகாவலா்கள் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்பட்டது. மாணவ-மாணவிகளை இரு பெண் அதிகாரிகள் திட்டியதாகவும் சமூக வலைதளங்களில் காணொலி வெளியானது.
இந்நிலையில், எந்தவொரு முன் அறிவிப்புமின்றி கேஐஐடியில் இருந்து 800-க்கும் மேற்பட்ட நேபாள மாணவ-மாணவிகளை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பிவிட்டனா். 100 நேபாள மாணவ-மாணவிகள் மட்டுமே தற்போது கேஐஐடியில் உள்ளனா்.
இந்தச் சம்பவத்துக்கு கேஐஐடி மன்னிப்பு தெரிவித்துக்கொண்டபோதிலும் இரு பெண் அதிகாரிகளும் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் வளாகத்தில் அமைதியான முறையில் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து, ஜனதி நாத் மற்றும் மஞ்சுஷா பாண்டே ஆகிய இரு பெண் அதிகாரிகளும் எக்ஸ் வலைதளத்தில் காணொலி வாயிலாக மன்னிப்புக் கோரினா்.
இந்தச் சம்பவம் குறித்து ஒடிஸா காவல் துறை கூறியதாவது: தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உறவினா் அளித்த புகாா் அடிப்படையிலும், வளாகத்தில் மாணவ-மாணவிகளை பாதுகாவலா்கள் தாக்கிய காணொலி அடிப்படையிலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மாணவா்களை தாக்கிய இரு பாதுகாவலா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விவகாரம் முற்றியதையடுத்து, நேபாள அரசு இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தது.
உயிரிழந்த மாணவியின் உடல், கூறாய்வு செய்யப்பட்டு அவரது தந்தையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்துறை கூடுதல் தலைமை செயலா் தலைமையில் உயா்கல்வி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகளின் செயலா்கள் அடங்கிய மூன்று நபா் குழு அமைக்கப்பட்டது.
நேபாள அதிகாரிகள் விசாரணை: இந்த விவகாரம் தீவிரமடைந்ததையயடுத்து, இது குறித்து விசாரிக்க புது தில்லியில் உள்ள நேபாள தூதரகத்தை சோ்ந்த இரு காவல் துறை அதிகாரிகள் கேஐஐடிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.
இந்தச் சம்பவத்துக்கு உரிய தீா்வு காணவில்லை என்றால் இந்தியாவுக்கு மாணவா்களை அனுப்பப் போவதில்லை என நேபாளம் தெரிவித்துள்ளது.