``நீங்க நல்லா சமைப்பீங்கனு தெரியும், ஆனா இந்த ஷோல'' - ட்ரோல் செய்யப்பட்ட கனிக்கு...
ஒளிராத மின்மினிகள் கண்டுபிடிப்பு! குரும்பர் பழங்குடிகளின் பெயரை சூட்டிய ஆய்வாளர்கள் - ஏன் தெரியுமா?
இயற்கையின் பேரதிசயம் அல்லது பெருங்கொடை என ஆய்வாளர்களால் போற்றப்படும் மேற்கு தொடர்ச்சி மலையில் மதிப்பிட முடியாத அளவில் வனவளங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் நிகழ்த்தப்படும் கடுமையான வன சிதைப்புக்கு மத்தியில் கானகங்களும் கானுயிர்களும் தப்பிப் பிழைத்து வருகின்றன.

மனித செயல்பாடுகளால் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டிருக்கும் உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுக்காக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான மக்களுக்கான குடிநீர், உணவு, வாழிடம் என அனைத்துமாய் வாழ்வளித்து வரும் மேற்கு தொடர்ச்சி மலையில் இன்றளவும் அறியப்படாத உயிரினங்களும் தாவர இனங்களும் இருப்பது ஆய்வாளர்களையே அதிசயக்க வைத்து வருகிறது. இன்றளவும் புதிய புதிய உயிரினங்களைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்து வருகின்றனர்.
மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இந்தியாவின் முதல் பல்லுயிர் பெருக்க வள மண்டலமான நீலகிரியில் புதிதாக இரண்டு மின்மினி பூச்சி இனங்களை ஆய்வாளர் குழு ஒன்று அண்மையில் கண்டறிந்துள்ளது. வழக்கமான மின்மினிகளைப் போன்று ஒளிராமால் , உணர் கொம்புகளை அடிப்படையாகக் கொண்டு வாழும் இந்த இரண்டு ஒளிரா மின்மினி பூச்சி இனங்களுக்கு பண்டைய பழங்குடி இனமான குரும்பா மற்றும் டேப்பிரசுமா ஆகிய பெயர்களைச் சூட்டியுள்ளனர்.

புதிதாக கண்டறியப்பட்ட ஒளிரா மின்மினி இனங்கள் மற்றும் அவற்றின் நிலை குறித்து நம்மிடம் பகிர்ந்த ஆய்வாளரில் ஒருவரான மொய்னுதீன் , " லமேலி பல்போடெஸ் எனப்படும் ஒளிராத தண்மை கொண்ட மின்மினி பூச்சி இனங்கள் இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் தாய்லாந்தில் காணப்படுகின்றன. ஒளிராத தண்மை கொண்ட மின்மினிகள் குறித்து வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் அர்னோப் சக்ரவர்த்தி, பனானி பட்டாச்சாரி, அபினேஷ், சாம்சன், சாதிக் அலி மற்றும் நான் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது புதிதாக இரண்டு மின்மினி பூச்சி இனங்களைக் கண்டறிந்தோம். ஒளிராத தண்மை கொண்ட இந்த மின்மினி பூச்சி இனங்கள் ஒளிக்கு பதிலாக உணர் கொம்புகளின் மூலம் இணையைக் கவர்ந்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தி வருவதையும் கண்டறிந்தோம். கண்டுபிடிப்பாளர்களின் ஒருவரை மையப்படுத்தும் வகையில் ஒரு பூச்சி இனத்திற்கு டேப்பிரசுமா என பெயர் சூட்டப்பட்டது. மற்றொரு பூச்சி இனத்திற்கு நீலகிரியில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி இன மக்களான குரும்பர் பழங்குடி மக்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏனெனில் இயற்கையுடன் இயைந்து வாழும் குரும்பர் பழங்குடிகளின் சூழலியல் வாழ்நிலைகள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் மிதமிஞ்சிய பூச்சிக்கொல்லி பயன்பாடுகள், ஒளி மாசு, மனித குலத்தில் நிலவும் அடிப்படை பொருளாதார சமத்துவமின்மை போன்ற காரணங்களால் மின்மினிகளும் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன. இரண்டையும் இந்த மண்ணில் பாதுக்காக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இவற்றை பாதுகாப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பங்கு வைகிக்கும்" என்றார்.