Sathish - Deepa Couples: "எத்தனை Dosaதான் சாப்பிடுவீங்க?" | Vikatan Digital Awar...
வேலூர்: தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவன் அடித்துக் கொலை - ஆண் நண்பனுடன் சிக்கிய மனைவி
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்குஉட்பட்ட ஊனை வெங்கடசாமிரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி தேவேந்திரன் (35). இவரின் காதல் மனைவி கலைவாணி (30). குடும்பத் தகராறு காரணமாக, சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கந்தனேரி அருகிலுள்ள பொந்தியம் தோப்புப் பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் தேவேந்திரன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
பள்ளிகொண்டா காவல் நிலையப் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்தபோது, தேவேந்திரனை அவரின் மனைவி கலைவாணியே தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாகத் தெரியவந்தது.

அவர்களை தேடியபோது, வேலூர் சத்துவாச்சாரி அடுத்துள்ள பெருமுகை பகுதியில் பிடிபட்டனர். விசாரணையில், கலைவாணியின் ஆண் நண்பர் ராணிப்பேட்டை நவல்பூரைச் சேர்ந்த அருண்குமார் (25) எனத் தெரியவந்தது. ஷு கம்பெனி ஒன்றில் இருவரும் ஒன்றாக வேலை செய்துவந்தபோது ஏற்பட்ட பழக்கம், இப்போதும் தொடர்ந்ததால் திருமணத்தை மீறிய உறவில் அருண்குமாருடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார் கலைவாணி. மனைவியின் தகாத உறவு கணவன் தேவேந்திரனுக்கும் தெரியவந்ததால், மனைவியை அவர் கண்டித்திருக்கிறார்.
இதையடுத்து, பெருமுகை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து மனைவி, பிள்ளைகளுடன் குடிப்பெயர்ந்தார் கணவன் தேவேந்திரன். அதன் பிறகும், கணவனுக்குத் தெரியாமல் ஆண் நண்பர் அருண்குமாரைத் தனிமையில் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் கலைவாணி. வேலை நிமித்தமாக கணவர் வெளியூர் சென்றுவிடும்போது, ஆண் நண்பனை வீட்டுக்கே வரவழைத்து தங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் தெரிந்துகொண்ட கணவர் தேவேந்திரன் மனவேதனைக்குள்ளாகி மனைவியைப் பிரிந்து அணைக்கட்டுப் பகுதியிலுள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இருப்பினும், பிள்ளைகள் மீதான பாசத்தில் அடிக்கடி பெருமுகைப் பகுதிக்கு வந்து சென்றுள்ளார். இதை மனைவி கலைவாணி விரும்பவில்லை. தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக கோபமடைந்த மனைவி கலைவாணி தனது ஆண் நண்பர் அருண்குமாருடன் சேர்ந்து கணவர் தேவேந்திரனை கொலை செய்யத் திட்டம் தீட்டியிருக்கிறார்.
அதன்படி, கடந்த 7-ம் தேதி இரவு தேவேந்திரனை பின்தொடர்ந்து நோட்டமிட்டு கடுமையாக தாக்கி கொலை செய்து, சடலத்தை வீசிவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் வேலூர் சிறையில் அடைத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.