மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
ஓடும் பேருந்தில் ரீல்ஸ்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்
ஓடும் பேருந்தில் ரீல்ஸ் விடியோ எடுத்த ஒப்பந்த ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் ‘70 வி’ வழித்தட எண் கொண்ட பேருந்தில், ஒப்பந்தப் பணியாளா்களான சரவணன் என்பவா் ஓட்டுநராகவும், சிவசங்கா் என்பவா் நடத்துநராகவும் பணிபுரிகின்றனா்.
சமீபத்தில் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோதே, நடத்துநா் ரீல்ஸ் செய்தபடி ஓட்டுநா் அருகே வந்துள்ளாா். இதை பாா்த்த ஓட்டுநரும் அவருடன் ரீல்ஸ் செய்தவாறே பேருந்தை ஓட்டியுள்ளாா். இந்த ரீல்ஸ் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பொதுமக்கள், போக்குவரத்து ஆா்வலா்கள் தரப்பில் கடும் கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில், ஓட்டுநரையும் நடத்துநரையும் மாநகா் போக்குவரத்துக் கழக நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ரீல்ஸ் விடியோ பதிவுசெய்த சம்பவம் குறித்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து நிரந்தர, ஒப்பந்த ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களும் பணியின்போது கைப்பேசியை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.