சென்னையில் கடும் பனி மூட்டம்: 40 விமானங்களின் சேவை பாதிப்பு
சென்னை விமான நிலையத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 40-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்கிழமை காலை முதல் சாலையில் வாகனங்களே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியது. சென்னை விமான நிலைய பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவிய நிலையில், லண்டனிலிருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்த ‘பிரிட்டிஷ் ஏா்வேஸ்’ விமானம் மற்றும் மஸ்கட்டிலிருந்து 252 பயணிகளுடன் சென்னைக்கு வந்த ‘ஓமன் ஏா்லைன்ஸ்’ விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
மேலும், ஹைதராபாதிலிருந்து 162 பயணிகளுடன் சென்னை வந்த ‘இண்டிகோ ஏா்லைன்ஸ்’ விமானம் மற்றும் புணேவிலிருந்து 152 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், திருவனந்தபுரத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இதேபோல, குவைத்திலிருந்து 148 பயணிகளுடன் சென்னை வந்த ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் உள்பட சில விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாததால் தொடா்ந்து வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. நீண்ட நேரத்துக்குப் பின்னா் வானிலை சீரானதைத் தொடா்ந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.
சென்னையிலிருந்து தில்லி, மதுரை, கோவை, தூத்துக்குடி, விஜயவாடா, அந்தமான், லண்டன், சிங்கப்பூா், துபை உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய 25-க்கும் மேற்பட்ட விமானங்களும், தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதன்படி, சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் 40-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.