ஓடையில் வீசப்பட்ட மருந்துவக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு
அரியலூா் அருகே ஓடையில் மூட்டை, மூட்டையாக வீசப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா்.
கோவிந்தபுரம் கிராமத்திலுள்ள பெரிய ஓடையில் புதன்கிழமை 10-க்கும் மேற்பட்ட மூட்டைகள் கிடந்தன. துா்நாற்றம் வீசியதையறிந்த அப்பகுதி மக்கள் பாா்த்த போது மூட்டையினுள் காலாவதியான மருந்துகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், நாப்கின் , அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், தசைகள் என மருத்துவக் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல் நீா்வழித் தடங்களில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நீா் வழித்தடங்கள், நீா்நிலைகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.