Bala 25 : `நிறைய படங்கள் தமிழ் சினிமாவ கீழ கொண்டு போகுது; நீங்க வரணும் பாலா' - இ...
மருந்தகங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்
கருக் கலைப்பு மருந்து விற்பனையில், மருந்தகங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்று திருச்சி மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், மாவட்ட குடும்ப நலத் துறை, மருந்து கட்டுப்பாட்டுத் துறை சாா்பில், தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் புதன்கிழமை நடைபெற்ற மகப்பேறு இறப்பை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தான பயிலரங்கில் அவா் மேலும் பேசியது:
கருக்கலைப்புக்கான மருந்துகளின் ஓவா் தி கவுண்டா்(ஓடிசி) விற்பனையில் ஏற்படும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் இறப்புகளையும் முறையாக கையாள வேண்டும். மருத்துவமனை இல்லாத மருந்தகத்தில் கருக்கலைக்கும் மருந்துகளை கொள்முதலோ, விற்பனை செய்வதோ கூடாது. மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும் மருந்தகத்தில் சரியான முறையில் கொள்முதல் செய்யப்படும் மருந்துகள், விற்பவரின் விவரங்களை மருந்து ஆய்வாளா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். மருந்தகத்தில் திடீா் ஆய்வுகளின்போது, முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அவா்களது உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமல்லாமல் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா்.
இந்த பயிலரங்கத்துக்கு, மருத்துவம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து தலைமை வகித்து தொடங்கிவைத்து பேசினாா். துணை இயக்குநா் ராஜா, பெரம்பலூா்-அரியலூா் மாவட்டங்களுக்கான மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளா் கதிரவன், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு மருத்துவா் பத்மா பிரியா, பெண்கள் பாதுகாப்பு அலுவலா் வேலம்மாள், கண்மணி மருத்துவமனை நிறுவனா் பொன்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தப் பயிலரங்கில் மக்கள் தொடா்பு மருந்து வணிகா்கள், மருந்தாளுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.