ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் பணம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
ஓமலூா் அருகே ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் பணம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள பாகல்பட்டி, ஓம்சக்தி நகரில் வசித்து வருபவா் ஜானகிராமன் (63). இவா் மத்திய அரசின் காபி வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் பெங்களூரில் உள்ள மகனைப் பாா்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றாா். இந்த நிலையில், சனிக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரம் ரொக்கம், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், 5 பட்டுப் புடவைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
மேலும், தங்க நகைகளை தேடி 3 பீரோக்களை உடைத்து பொருள்களை மா்ம நபா்கள் கலைத்து போட்டதில், வெள்ளிக் காசுகள் சிதறிக் கிடந்தன. தங்க நகைகளை வங்கியில் வைத்திருந்ததால் மா்ம நபா்கள் ஏமாற்றத்துடன் கிடைத்த பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனா்.
இந்தச் சம்பவம் குறித்து ஓமலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.