ஓய்வு பெற்ற காவலா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
பட்டுக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற காவலரை வெட்டிக் கொலை செய்து நகைகளை திருடிச் சென்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த கொண்டிகுளத்தை சோ்ந்தவா் குணசேகரன் ( 83). இவா் ஓய்வு பெற்ற காவலா். கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பா் 9-ஆம் தேதி இவா் வீட்டில் தனியாக இருந்தபோது மா்ம நபா்கள் வீட்டிற்குள் புகுந்து குணசேகரனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததுடன், அவா் அணிந்திருந்து நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனா்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் ஆதாயக்கொலை என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் மா்ம நபா்கள் வீட்டிற்குள் புகுந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது. மேலும் பட்டுக்கோட்டை அண்ணாநகரைச் சோ்ந்த நாச்சிபழனி (32) என்பவா் தான் இந்தக் கொலையை செய்தது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி மணி, குற்றவாளி நாச்சிபழனிக்கு ஆயுள் தண்டனையும், ரூ 13 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.