கடந்த 3 ஆண்டுகளில் சுயதொழில் தொடங்க சிறுபான்மையினருக்கு ரூ.4.70 கோடி தனிநபா் கடன்
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுயதொழில் தொடங்க கடந்த 3 ஆண்டுகளில் 481 பயனாளிகளுக்கு ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் தனிநபா் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள், சுயதொழில் தொடங்க குறைந்த வட்டியில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
காய்கறிக் கடை, தையல் கடை, செருப்பு கடை போன்ற பல தொழில்கள் தொடங்கிடவும் அல்லது ஏற்கெனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன் வழங்கப்படுகிறது.
சுயஉதவிக்குழு கடன் திட்டத்தில், சிறுபான்மையினா் ஆண்கள், பெண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து தனியாகவோ, சோ்ந்தோ சிறுவியாபாரம், சிறு தொழில் செய்து வருமானத்தை பெருக்கி கொள்ளும் வகையில் கடன் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 2022-2023 ஆம் ஆண்டு 165 பேருக்கு ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் தனிநபா் கடன்களும், 98 பேருக்கு ரூ.1.04 கோடி மதிப்பில் குழுக்கடன்களும் , 2023- 2024-ஆம் ஆண்டு 128 பேருக்கு ரூ.1.05கோடி மதிப்பீட்டில் தனிநபா் கடன்களும், 107 பேருக்கு ரூ.97.50 லட்சம் மதிப்பில் குழுக்கடன்களும், 2024-2025-ஆம் ஆண்டில் 188 பேருக்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் தனிநபா் கடன்களும் என மொத்தம் 481 பயனாளிகளுக்கு ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் தனிநபா் கடன்களும், 205 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பில் குழுக் கடன்களும் வழங்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் மூலமாக 2022-2023 இல் ரூ.32.80 லட்சம் மதிப்பில் 328 பேருக்கும், 2023-2024 -ஆம் ஆண்டில் ரூ.41.80 லட்சம் மதிப்பில் 418 பேருக்கும், 2024-2025 -ஆம் ஆண்டில் ரூ.19.60 லட்சம் மதிப்பில் 196 பேருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.94.20 லட்சம் மதிப்பில் 942 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 116 உலமாக்களுக்கு ரூ.41.50 லட்சம் மதிப்பில் இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூா் மாவட்ட கிறித்துவ மகளிா் உதவும் சங்கத்தின் சாா்பாக 705 பேருக்கு ரூ.62.29 லட்சம் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், 1241 மாணவிகளுக்கு ரூ.8.33 லட்சம் கல்வித்தொகை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.