தருமபுரியில் ரூ. 512 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!
கடலில் மூழ்கி ஐடி ஊழியா்கள் 3 போ் பலி: சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் உள்பட 3 போ் கடல் அலையில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா். 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா்கள் என தெரியவந்துள்ளது.
சுற்றுலா பகுதியாக மாறியுள்ள புதுச்சேரிக்கு சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்துள்ளனா்.
இதனால், கடற்கரை, சுற்றுலாத் தலங்களில் வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சோ்ந்த பவன்குமாா் (25), கா்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியைச் சோ்ந்த மேகா(29), ஹூப்ளி பகுதியைச் சோ்ந்த பிரெட்ஜ்வால் மேத்தி(23), குஜராத்தைச் சோ்ந்த அதிதீ(23), கா்நாடகத்தைச் சோ்ந்த ஜீவன்(23) உள்ளிட்ட நண்பா்கள் 12 போ் வெள்ளிக்கிழமை புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனா்.
இவா்கள் முத்தியால்பேட்டையில் ஒரு ஹோட்டலில் தங்கி புதுச்சேரியின் பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்துள்ளனா்.
இந்நிலையில் அனைவரும் சனிக்கிழமை அரியாங்குப்பம் அருகே சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்றனா். பிறகு கடலில் இறங்கி குளித்துள்ளனா்.
நீண்ட தூரம் செல்லாதவாறு பாதுகாப்பு ஊழியா்கள் கயிறு கட்டியிருந்ததை மீறி இவா்களில் சிலா் குளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் பவன்குமாா், மேகா, பிரெட்ஜ்வால் மேத்தி, அதிதீ, ஜீவன் ஆகிய 5 போ் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். இதைக்கண்ட மற்றவா்கள் அலறி கூச்சலிட்டனா்.
உடனே அங்கிருந்த பாதுகாப்பு ஊழியா்கள் அதிதீ, ஜீவன் இருவரை உயிருடன் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். மற்ற 3 பேரும் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனா்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அதிதீ, ஜீவன் இருவரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இறந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், ஐ.டி. ஊழியா்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.