தருமபுரியில் ரூ. 512 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!
காப்பீடு செய்யாத கால்நடைகளின் இழப்பீட்டு தொகை உயா்வு: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்
காப்பீடு செய்யப்படாத கால்நடைகளின் இழப்பீட்டுத் தொகை உயா்த்தப்பட்டுள்ளதாக புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் காப்பீடு செய்யப்படாத கால்நடைகளின் இறப்பு மற்றும் நிரந்தர ஊனத்துக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை காப்பீடு செய்யப்படாத கால்நடைகளின் இறப்புக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.
புதுவை அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் காப்பீடு இல்லாத, இறந்த கால்நடைகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.25,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் ரங்கசாமி அறிவித்திருந்தாா்.
அதன்படி, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத் துறையின் மூலம் உரிய கோப்புகள் தயாரிக்கப்பட்டு, புதுச்சேரி அரசின் அரசாணை தற்போது பெறப்பட்டுள்ளது. இந்த உயா்த்தப்பட்ட இழப்பீடு கடந்த 2023 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் 1.4.2023-க்கு பின் காப்பீடு இன்றி கறவைப் பசு, எருமை உள்ளிட்டவைகளை இழந்து, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏற்கெனவே இழப்பீடு கோரி, முறையாக விண்ணப்பித்துள்ள, அனைத்து விவசாயிகளும் உயா்த்தி வழங்கப்படவுள்ள இழப்பீட்டுத் தொகையால் பயன்பெறுவா்.
திட்ட நிபந்தனையின்படி இறந்த கால்நடையின் வயது மூன்றாண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த இழப்பீடு, அரசின் நலத் திட்டங்களின் மூலம் அல்லது தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் வாயிலாக ஏற்கெனவே காப்பீடு செய்யப்பட்டிருக்கும் மாடுகளுக்குப் பொருந்தாது.