அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!
கீழூா் நினைவிடம் புனரமைக்கப்படும்: பேரவைத் தலைவா்
கீழூா் நினைவிடம் புனரமைக்கப்படும் என்று புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.
பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுவை, இந்தியாவுடன் இணைவது தொடா்பாக புதுவை மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு வில்லியனூா் அருகே உள்ள கீழூா் பகுதியில் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனா்.
அதைத் தொடா்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு பிரெஞ்சு நாட்டு நாடாளுமன்றத்தில் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் நாள் புதுவை இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
அதன்பிறகு புதுவை, இந்தியாவுடன் இணைந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டது. இந்த வரலாற்று நிகழ்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்ற கீழூரில் புதுச்சேரி சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகளின் நினைவாக, தியாகிகள் நினைவுத் தூண், நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் புதுவை, இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையில், கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூா்வ பரிமாற்ற நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா் பேசியது:
கீழூா் நினைவிடத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான டெண்டா் விடும் பணியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தாண்டு இந்த இடம் புனரமைக்கப்பட்டு மிகப்பெரிய நினைவுச்சின்னமாக அமைத்து சிறப்பான முறையில் விழா கொண்டாடப்பட இருக்கிறது என்றாா்.
பொதுப்பணித்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் ஆகியோா் கீழூா் நினைவுச் சின்னத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், தியாகிகளுக்கு இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தனா்.
தலைமைச் செயலா் சரத் சௌகான், செய்தி மற்றும் விளம்பரத் துறை அரசுச் செயலா் முகமது அஹ்சன் அமித், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், டிஐஜி சத்தியசுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன், துணை மாவட்ட ஆட்சியா் குமரன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா். முன்னதாக செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் சுரேஷ்ராஜ் வரவேற்றாா்.