கடும் பனிப்பொழிவு: குளுகுளுவென மாறிய ஏற்காடு!
ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வற்ற தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் சூழ்ந்தது.
இந்த பனிமூட்டத்தால் ஏற்காடு முழுவதும் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கடும் பனி சூழ்ந்து 5 அடி தூரத்தில் இருப்பதுகூட தெரியாத சூழல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை சரியான அளவில் தெரியாததால் வாகனத்தின் முகப்பு விளக்கை எறியவிட்டவாறு வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
மேலும், கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. ஏற்காட்டைச் சூழ்ந்த கடும் பனி மூட்டத்தாலும் மழையாலும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அரசு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் ஏற்காட்டிற்குச் சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவிலேயே வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் குளுகுளுவென மாறிய ஏற்காட்டில் உள்ள முக்கிய இடங்களைச் சுற்றிப்பார்த்து மகிழ்கின்றனர்.
ஏற்காடு படகு இல்லம் சென்ற சுற்றுலாப் பயணிகள் படகில் சவாரி செய்தவாறு ஏரியைச் சூழ்ந்த பனிமூட்டத்தைக் கண்டு ரசித்தனர். மேலும் சூழல் சுற்றுலாப் பூங்காவிற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள சாகச விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர். தொடர்ந்து புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.