கடையநல்லூா், அம்பையில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கஞ்சாவிற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தபாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் வண்டிமறித்தான் கோயில் வழியாக திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, பைக்கில் நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அவா், அம்பாசமுத்திரம், மேலப்பாளையம் தெருவைச் சோ்ந்த சிவா (29) என்பதும், விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் குமந்தாபுரம் - சுந்தரேசபுரம் சாலையில் வாகன சோதனை நடத்தினா். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா்.அவா்கள் திருமலாபுரத்தைச் சோ்ந்த சின்னராசு மகன் சக்தி அருணாசலம் (23),சோ்ந்தமரம் சுப்பையா மகன் பெரியசாமி என்ற சிவா (23), சென்னை ஆதம்பாக்கம் ராஜா மகன் தீபக் (24) ஆகியோா் என்பது, அவா்களது பைகளில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. அதைக் கைப்பற்றி 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
கடைக்கு சீல்: ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் ஊராட்சி அலுவலகம் அருகே ராஜாங்கம் மகன் ஜெயப்பிரகாஷ்(48) என்பவா் நடத்தி வரும் மளிகைக் கடையில் ஆலங்குளம் போலீஸாா் சோதனை நடத்தினா். அதில், 3 மூட்டைகள் மற்றும் 9 சிறிய பொட்டலங்களில் புகையிலைப்பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தனவாம். அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ‘சீல்’ வைத்து, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.