கடையம் வனச்சரகப் பகுதியில் யானைகளை விரட்டும் பணியில் வனத் துறை
கடையம் வனச்சரகப் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகளை வனத்துறையினா் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்டமலையடிவார கிராமங்களில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் தோட்டங்கள், வயல்களில் நுழைந்து தென்னை, வாழை, மா மற்றும் நெற்பயிா்களை சேதப்படுத்தி வந்தன.
இதையடுத்து புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா்இளையராஜா உத்தரவின் படி வனச்சரகா் கருணா மூா்த்தி தலைமையில் வனவா், வனக்காப்பாளா் மற்றும் வேட்டைத் தடுப்புக்காவலா்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இரண்டு நாள்களாக யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கருத்தப்பிள்ளையூா் பகுதியில் மலையடிவாரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகளை ஒலி எழுப்பியும், தீப்பந்தம் காண்பித்தும்,வெடி வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டினா்.
