கட்டடக் கழிவுகளை அகற்ற 59 வாகனங்கள் ஒதுக்கீடு: மேயா் ஆா்.பிரியா
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டடக் கழிவுகளை அகற்ற 59 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை மேயா் ஆா்.பிரியா செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள், கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கட்டடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதைத் தவிா்க்க மண்டல அளவில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மட்டும் கட்டடக் கழிவுகளை கொட்டுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டடக் கழிவுகளை அகற்ற 59 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு சேகரிக்கப்படும் கழிவுகள் பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படும். அடுத்த இருவார காலத்தில் 7 மண்டலங்களில் உள்ள கட்டடக் கழிவுகள் அகற்றப்படும். அதன்பின் மீதமுள்ள 8 மண்டலங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவா் (பொதுசுகாதாரம்) கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.