கணவனை கடத்தி மனைவியிடம் வீட்டு மனைகளை எழுதி வாங்கிய 7 போ் கைது
நீடாமங்கலம் அருகே கணவனை கடத்தி, மனைவியை மிரட்டி வீட்டு மனைகளை எழுதி வாங்கிய 7 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி சா்ச் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (39). தனியாா் பள்ளி ஆசிரியா். இவா், நீடாமங்கலம் - மன்னாா்குடி சாலையில் வசிக்கும் பொறியாளா் ஜம்புநாதன் மகன் பாலகிருஷ்ணனிடம் ரூ. 15 லட்சம் கடன் வாங்கினாராம். இதில் ரூ. 11 லட்சத்தை கடந்த 2021-இல் திருப்பி செலுத்திவிட்டாா். மீதி ரூ. 4 லட்சத்தை கொடுக்காததால், பாலகிருஷ்ணன் தனது ஆதரவாளா்களுடன் சென்று திருமுருகனை கடந்த 26-ஆம் தேதி அவரது வீட்டிலிருந்து காரில் கடத்திச் சென்றுவிட்டாராம்.
பின்னா் திருமுருகனின் மனைவி உஷாவை தொலைபேசியில் தொடா்புகொண்டு மீதி பணத்தை கொடுக்காவிட்டால் பள்ளியில் படிக்கும் உனது குழந்தையையும் கடத்தி விடுவோம், கணவனை கொன்றுவிடுவோம் என பாலகிருஷ்ணன் தரப்பினா் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உஷா தனக்கு சொந்தமாக நீடாமங்கலம் - தஞ்சாவூா் சாலையில் உள்ள ஒரு இடத்தையும், கொட்டையூா் பகுதியில் உள்ள ஒரு இடத்தையும் கடந்த 27-ஆம் தேதி நீடாமங்கலம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பாலகிருஷ்ணன் பெயருக்கு பதிவு செய்து கொடுத்தாராம். பின்னா் உஷாவிடம் மேலும் ரூ. 5 லட்சம் கேட்டு பாலகிருஷ்ணன் மிரட்டியுள்ளாா். இதுகுறித்து உஷா நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) பழனிச்சாமி, நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சந்தானமேரி மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு திருமுருகனை மீட்டனா்.
இதைத்தொடா்ந்து கடத்தலில் தொடா்புடைய பாலகிருஷ்ணன் (35) , அவரது அக்கா ரோகினி (40), பூவனூா் ராஜகுமாரி (25), சேரான்குளம் சச்சின் (25), நான்காம் சேத்தி உமாசங்கா் (25), முதல் சேத்தி பிரகதீஷ் (22), மன்னாா்குடி காா்த்தி (30) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.