செய்திகள் :

கண் கோளாறு நீக்கும் தலம்...

post image

ராஜராஜ சோழனின் பட்டத்து அரசி லோக மகாதேவியின் பெயரில் "உலகமகாதேவிபுரம்' என அழைக்கப்பட்ட ஊரின் பெயர் மருவி, தற்போது "உலகாபுரம்' எனப்படுகிறது. ஓய்மா நாட்டு தனி ஊராகத் திகழ்ந்த இங்கு சிவ-விஷ்ணு கோயில்கள் இரண்டுமே புகழ்பெற்றவை.

1919-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கை வாயிலாக, இந்த ஊரில் 19 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை சிவன் கோயில், விஷ்ணு கோயில், ஆயக்குளம், ஐயனார் கோயில் ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டன. சோழ, பாண்டிய மன்னர்களின் திருப்பணியில் இவ்வூர் சிறந்து விளங்கியுள்ளது.

சிவன்கோயில்: முதலாம் ராஜராஜனுடைய ( 985}1014) மூன்றாம் ஆட்சியாண்டில் கயிலாசமுடையார் சிவாலயம், அம்பலவன் கண்டராதித்தனால் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வெளிப்புறம் உயரமான வடிவில் சூரியன், சந்திரன், கால பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர். அருகே பிரம்மாண்ட வடிவில் நந்திதேவர் கலைநயத்துடன் இறைவனை கல் ஜன்னல் வழியே நோக்கியவாறு அமர்ந்துள்ளார்.

கோயில் நுழைவு தென்புற வாயிலில் அமைந்துள்ளது. எதிரே வள்ளி, தெய்வானையோடு ஆறுமுக சுவாமி காட்சி தருகிறார். அதற்கு முன்பாக, இடதுபுறம் சுவாமியின் கருவறை அமைந்துள்ளது. உண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம் ஆகிய பகுதிகள் உள்ளன.

கருவறை முன்மண்டபச் சுவரில், கோயிலை எழுப்பிய அம்பலவன் கண்டராதித்தன் லிங்கத்தை வழிபடும் சிற்பம் காணப்படுகிறது. கருவறையில் பிரம்மாண்ட உருவில் கயிலாசமுடையார் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இவர் அரிகுலகேசரி ஈஸ்வரமுடையார், ஸ்ரீ கயிலைநாட்டு பரமஸ்வாமி, அரிகுல கேசரி ஈச்வரமுடையார் மகாதேவர், அரிகுல கேசவ ஈஸ்வரமுடைய நாயனார் என

கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளது. வெளிப்புறத்தில் கோஷ்ட தெய்வங்களாக தென்புறம் நர்த்தன விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, வடபுறம் கோமுகம் அருகே பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகிய சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.

துர்க்கையின் அழகு சோழர் சிற்பக் கலைக்கு தலைசிறந்தது. எண் கரங்களுடன், ஆடை அணிகலன்கள், நளினமான நின்ற கோலம் என சிலையின் அழகு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. இறைவன் சந்நிதியின் பின்புறம் "உலகமாதேவி அம்மன்' சந்நிதி தனியே அமைந்துள்ளது. அன்னை சுமார் ஐந்தடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் வழங்குகிறாள். சிவாலயத்தின் எதிரே சுமார் 50 அடி தூரத்தில் சிறிய திருக்குளமும், அதையொட்டி சிதிலமடைந்த சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது.

விஷ்ணு கோயில்: உலகாபுரத்தின் மேற்குப் பகுதியில் சோழர் கால விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. இறைவன் "அரிஞ்சய விண்ணகர் வீற்றிருந்த ஆழ்வார்' என அறிய முடிகிறது. முதலாம் ராஜேந்திர சோழனின் கலைப்பாணியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

இந்தத் தலம், கண் கோளாறு நீக்கும் என்பதோடு, சிற்பக் கலையையும் ரசிக்க உகந்தது. எம்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுமார் 10 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார். காலகண்ட பேரேரி, கண்டராதித்த பேரேரி போன்ற ஏரிகளின் பெயர்களும் கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. சுந்தரசோழப் பெரும்பள்ளி, கோகர்ணீசுவரம் உடையார், மகா சாத்தனார் ஆகிய மூன்று கோயில்கள் இருந்துள்ளன.

விழுப்புரம் அருகேயுள்ள வானூரை அடுத்து உலகாபுரம் அமைந்துள்ளது. திண்டிவனம் } மரக்காணம் நெடுஞ்சாலையில், வெள்ளக்குளம் கூட்டு ரோடில் இறங்கினால், அங்கிருந்து எளிதில் உலகாபுரம் செல்லலாம்.

உலகாபுரத்தைச் சுற்றி கிளியனூர் தேவாரத்தலம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருமுக்கல் மலை சிவன் கோயில், நல்லியக்கோடனுக்கு அருளிய முருகன் வாழும் முன்னூர் சிவாலயம், மயிலம் முருகன் மலைக் கோயில், திண்டிவனம் சிவ} விஷ்ணு கோயில்கள், நல்லியக்கோடனின் கிடங்கில் சிவன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் உள்ளன.

பலன் தரும் பாலைத்துறை பரிமளம்

பாலை நிலமும், மரமும் உண்டு. கும்பகோணம் } தஞ்சாவூர் வழியில், "திருப்பாலைத்துறை' என்ற ஊரின் தல மரம் பாலை மரமே ஆகும்! துறை என்பது நீர்நிலைகளில் இறங்கிப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள இடமாகும். திருமுற... மேலும் பார்க்க

சூரியன் வழிபடும் கோயில்

சிவகங்கையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் இலுப்பை, பனை மரங்கள் அடர்ந்த பகுதியில் வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது. 350 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வீற்ற... மேலும் பார்க்க