``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிக...
பலன் தரும் பாலைத்துறை பரிமளம்
பாலை நிலமும், மரமும் உண்டு. கும்பகோணம் } தஞ்சாவூர் வழியில், "திருப்பாலைத்துறை' என்ற ஊரின் தல மரம் பாலை மரமே ஆகும்! துறை என்பது நீர்நிலைகளில் இறங்கிப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள இடமாகும். திருமுறைகளில் அப்பர் தேவாரத்தில் 51-ஆவது பதிகம். தாருகாவன முனிவர்கள் காழ்ப்புணர்ச்சியில் இறைவனை அழிக்க எண்ணி, தீயவேள்வியில் புலியை உருவாக்கி ஏவினர். புலியை இறைவன் கொன்று, அதன் தோலை ஆடையாக அணிந்த தலம்.
"கிருத யுகத்தில் ஈசன் பற்றின்றி சிவமே' என்றிருந்தார். உமையை மணந்தால்தான் உலக இயக்கம் தொடரும். மன்மதன் மலர் அம்புகளை எய்ய, தவம் களைந்த சிவன் தழல் விழியில் சாம்பலானான். தேவர்கள் வேண்ட பார்வதியை மணம் புரிந்தார். சாம்பல் குவியலை பிள்ளையார் உருட்டி உயிர் கொடுக்க, பண்டாசுரன் தோன்றி தேவர்களுக்குத் துன்பம் தந்தான். சிவனிடம் தேவர்கள் முறையிட உடனிருந்த உமாதேவி அடர்ந்த வனமாக இருந்த இந்த ஊருக்குச் சென்று சிவனை வழிபட கூறினாள். அப்போது உமை "திரிபுரை' என்ற உருவில் தோன்றி, கரும்பு வில், மலர் அம்பு, அங்குசம் மலர் மாலை ஆகியவைகளுடன் கரும்பு வில் வளைத்து, மலரம்பை பண்டாசுரன் மீது எய்து கொன்றாள். அந்த வேள்விக்குண்ட வெப்பம் வெகுவாய் இருந்ததால், வீரபத்திரராய் ஈசன் தோன்றி தலையில் இருந்த கங்கையை அவிழ்த்துவிட அதுவோர் திருக்குளமாயிற்று. அந்த வனமே முனிவர்களுக்கு வாழிடமாக "பிரும்ம வனம்' என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
திரேதா யுகத்தில் வசிஷ்டர் பிரம்மரிஷி பட்டம் பெற அரச மரத்தடியில் பிரும்மவனக் குளக்கரையில் சித்திரை மாதத்தில் சுக்கில பட்சம் பெüர்ணமி வியாழக்கிழமை அபிஜித் முகூர்த்தத்தில் காவிரி ஆற்று மணலால் லிங்கம் நிறுவி, அவரோடு 3 ஆயிரம் முனிவர்களும் பூஜித்தனர். சிவனும் காட்சி தந்து வசிஷ்டருக்கு பிரம்மரிஷி பட்டமும் மற்றவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப பட்டமும் அளித்த தலம் . நாளடைவில் காவிரி மணல் லிங்கம் மெல்ல கெட்டிப்பட்டது. இந்த வனம் "அரசங்காடு' என்றும் தீர்த்தம் "வசிஷ்ட தீர்த்தம்' என்றும் வழங்கப்பட்டது.
தனித்திருந்த சிவனுக்கு தெற்காக உமையின் திருவுருவை நிறுவி பூஜித்தனர். உமை மகிழ, சிவனுக்கு துணையாக உலகம் முழுவதும் தன்மை உண்டானது.அதனால் அம்பாளுக்கு "தவள வெண்ணகை மங்கை' எனப் பெயரிட்டு வழிபடலாயினர். துவாபர யுகத்தில் அரச மரம் மாறி, "புன்னாகக் காடு' உருவானது, வைகாசி விசாகப் பெüர்ணமியில் வசிஷ்டர் முதலிய முனிவர்கள் திருவைந்தெழுத்து ஓதி பலன் பெற்றனர். இந்திரன் நட்சத்திர ஹாரமும், வருணன் முத்து மாலையும், அக்னி பலவித ஆபரணங்களையும் குபேரன் நிறைந்த செல்வத்தையும் வலம்புரிச்சங்கையும் ஈசனுக்கு சமர்ப்பித்தனர் .
மலயத்துவஜ பாண்டியன் ஒருமுறை காலவ முனிவரைச் சந்தித்தபோது, "மன்னனே அனைவரிலும் உயர்ந்தவர்' என்றார். முனிவர் அவனை ஒரு கரடியாக, சாபமிட்டார். அரசி வருந்தி, இறைவனிடம் வேண்ட அகத்தியர் கூற்றின்படி, கரடி வடிவில் திருப்பாலைத்துறை வனத்தில் சென்று ஈசனை வழிபடக் கூறினார். ஒரு நாள் ஒரு வேடன் கரடியை விரட்ட தடுமாறி மன்னன் ஆற்றில் விழ, சுயவுருவடைந்தான். மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசக் காலத்தில், தெüமிய முனிவர் தெரிவித்தபடி அர்ச்சுனன் இங்கு சுயம்புவாய் நின்ற லிங்கத்தை வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து,தெளிந்து சிறந்த வீரனானான்.
திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகியோர் வழிபட்ட தலம். "அனுபவத்தால் உணர்ந்து தனது தொண்டருக்கு தொல்லைகள் வந்தால், கோட்டையைப் போல் இருந்து காப்பாற்றுவார் திருப்பாலைத்துறை இறைவன்' என்கிறார் திருநாவுக்கரசர், தேவார மூவர் காலம் முன்பே இருந்து பாடல் பெற்ற தலமாதலால் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சோழர்கள் காலத்தில் கற்றளியாக மாறியது எனலாம், கோயிலின் முன்புறம் ஐந்து நிலை ராஜகோபுரமும், உள்ளே மூன்று நிலை ராஜ கோபுரமும் அமைந்துள்ளன.
கருவறையில் பாலைவனநாதர் லிங்க வடிவமாய் அருளுகிறார். தவள வெண்ணகை சந்நிதி கோயிலின் வடபுறம் தனிக்கோயிலாக அமைந்துள்ளது. சுவாமி, அம்பாள் இருவரும் கல்யாணத் திருக்கோலத்தில் விளங்குகின்றனர். சிவனுக்கு சண்டிகேஸ்வரரும், அம்பாளுக்கு சண்டிகேஸ்வரியும் அமைந்துள்ளனர். விநாயகர், நடராஜர், நால்வர், அறுபத்து மூவர், சோமஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடனான ஆறுமுகர் நவக்கிரகங்கள், சனீஸ்வரன், சூரியன், சந்திரன், சந்நிதிகள், வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டலிங்கம், ராமர் பூஜித்த ராமலிங்கம், மகாலட்சுமி, அருச்சுனன் பூஜித்த அர்ச்சுன லிங்கம், மலயத்துவஜன் பூஜித்த மலயத்துவஜ லிங்கம் ஆகிய சந்நிதிகளும் உள்ளன.
கோயிலை ஒருமுறை தரிசனம் செய்தால் வாழ்வில் வளம் வரும், மணம் வீசும் என்பதனால் திருவருட்பா, "பாலைத்துறையில் பரிமளமே' என்கிறது. சுமார் 3 ஆயிரம் மரக்கால் கொள்ளளவுடைய 36 அடி உயரமும் 84 அடி சுற்றளவும் உடைய அதிசய நெற்களஞ்சியம் 1,600 முதல் 1,634 வரையுள்ள காலத்தில் தஞ்சையை ஆண்ட மன்னன் ஸ்ரீ ரகுநாத நாயக்கர் காலத்தில் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டது.
திருமணப் பிரார்த்தனை பரிகாரத் தலம். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெற இங்கு வழிபடலாம். கும்பகோணம்} தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்துக்கு முன் 14 கி.மீ. தொலைவில் இந்தத் தலம் உள்ளது.
}இரா.ரகுநாதன்