எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
கண்மாய் நடுவிலுள்ள மின்கம்பத்தை அகற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் ஊராட்சி, சின்னபிச்சம்பட்டி கண்மாயின் நடுவே ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலுள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சுதா அடைக்கலமணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தனலெட்சுமி அழகப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். ராமச்சந்திரன், ஆயிஷாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்களின் விவாதம்:
தனலெட்சுமி அழகப்பன் (துணைத் தலைவா்): ஆலவயல் சின்னப்பிச்சம்பட்டி கண்மாயின் நடுவே ஆபத்தை விளைவிக்கும் வகையில் காணப்படும் மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும். இதுகுறித்து கடந்த கூட்டத்தில் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
வட்டார வளா்ச்சி அலுவலா் ஆயிஷாராணி: இதுகுறித்து மின்வாரியத்தில் தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் இதுகுறித்து வலியுறுத்தப்படும்.
எஸ்பி. பழனியப்பன் (நல்லூா்): சேரனூா் அா்ச்சனாப்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும். பூமிபூஜை போடப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியை தரமான முறையில் அமைக்க வேண்டும்.
விஜயாமணி (வேந்தன்பட்டி): வேந்தன்பட்டி-விஜயபுரம் சாலையை சீரமைக்க வேண்டும். ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி: சாலை மேம்பாடு குறித்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். கடந்த 5 ஆண்டுக் காலம் எங்களுடன் இணைந்து மக்கள் பணியாற்றிய ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு நன்றி.
கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அ. அடைக்கலமணி, க. முருகேசன், கோ.பழனியாண்டி, சிவரஞ்சனி வினோத்குமாா், பிரியங்கா நாராயணன், வளா்மதி முருகேசன், ஆதிலெட்சுமி சோமையா, பி. மாணிக்கம், எஸ். அழகுரத்தினம், அ. சுந்தரராஜன், வே.பழனிச்சாமி மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பங்கேற்றனா்.