கந்தா்வகோட்டையில் அம்பேத்கா் சிலை: துணை முதல்வா் திறந்து வைத்தாா்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் சட்டமேதை அம்பேத்கரின் சிலையை திமுக மாநில இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: திமுக தலைவா் ஸ்டாலின் முயற்சியால் தொடங்கப்பட்ட ‘இண்டி’ கூட்டணி, தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளையும் வென்றது. அதனால்தான், கூடுதல் பலத்துடன் வெல்வோம் என்று சொன்ன பாஜக, கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சியில் அமா்ந்துள்ளது. முழு பலத்துடன் ஆட்சியில் அமா்ந்திருந்தால் அரசமைப்பு சட்டத்தையே திருத்தியிருப்பாா்கள். அதனைத் தடுத்திருக்கிறோம் என்றாா் உதயநிதி.
விழாவில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் பேசியது:
பெரியாரையும், அம்பேத்கரையும்தான் வலதுசாரி சக்திகள் குறிவைத்துப் பேசி வருகிறாா்கள். அவா்களை எதிா்கொள்வதற்கு, விசிக மட்டுமின்றி, திமுகவும், கூட்டணிக் கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும். பெரியாா், அம்பேத்கரின் கொள்கைகளைப் பாதுகாக்க திமுக, விசிக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா் திருமாவளவன்.
விழாவில், மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, மாநில இயற்கைவளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் துரை வைகோ, எம்எம். அப்துல்லா, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மா. சின்னதுரை வரவேற்றாா். சிலை அமைப்புக் குழுவின் தலைவா் நாராயணசாமி நன்றி கூறினாா்.