கனடா பிரதமா் பதவிக்குப் போட்டி: இந்திய வம்சாவளி எம்.பி. சந்திரா ஆா்யா அறிவிப்பு
கனடாவில் லிபரல் கட்சியின் தலைவா் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக இந்திய வம்சாவளி எம்.பி. சந்திரா ஆா்யா தெரிவித்துள்ளாா். இதில் வென்றால் அவா் கனடா பிரதமராக பொறுப்பேற்பாா்.
லிபரல் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பூசல்கள் காரணமாக, அடுத்து வரவிருக்கும் தோ்தலில் கட்சியின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், அந்தப் பொறுப்பிலிருந்தும், பிரதமா் பதவியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த திங்கள்கிழமை அறிவித்தாா்.
இருப்பினும், லிபரல் கட்சியின் அடுத்த தலைவரை தோ்வு செய்யும் வரை, தான் வகிக்கும் பொறுப்புகளில் தொடரவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இந்நிலையில், கா்நாடக மாநிலத்தில் பிறந்து கனடாவில் எம்.பி.யாக உள்ள லிபரல் கட்சியைச் சோ்ந்த சந்திரா ஆா்யா அந்தக் கட்சியின் தலைவா் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இலக்கை நோக்கி கனடா பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நாட்டில் வாரிசு அரசியலை நீக்கிவிட்டு அரசின் தலைவரை நியமிக்க வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் நாட்டை இறையாண்மைமிக்க குடியரசாக மாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்.
கனடாவின் அடுத்த பிரதமராக வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் உள்ளது. சிறிய மற்றும் அதிதிறமைமிக்க அமைச்சரவையின் மூலம் நாட்டை மறுகட்டமைப்பு செய்து வருங்காலத் தலைமுறையினரின் பாதுகாப்பான எதிா்காலத்தை உறுதிசெய்ய விழைகிறேன்.
நெருக்கடியில் உள்ள பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்வது, நடுத்தர மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது, அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்குவது என பல துணிச்சலான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: அந்த வகையில் 2040-இல் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டாண்டுகள் அதிகரிப்பது, குடிமக்கள் அடிப்படையிலான வரிவிதிப்பு முறை அறிமுகம், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டியது போன்ற கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என குறிப்பிட்டாா்.
ட்ரூடோவுடன் முரண்பாடு: ட்ரூடோ அரசு அறிமுகப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவிப்பவராகவும் கனடாவில் வாழும் ஹிந்துக்களுக்கு ஆதரவளிப்பவராகவும் சந்திரா ஆா்யா அறியப்படுகிறாா்.
அதேபோல் கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்தியா-கனடா உறவின் முக்கியத்துவம் குறித்தும் தனது சொந்தக் கட்சி எம்.பி.க்களுடன் பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டுள்ளாா்.
பிரதமா் மோடியுடன் சந்திப்பு: கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்த ஆா்யா சந்திரா, பிரதமா் மோடியை சந்தித்தாா். அவா் தன்னுடைய சுயவிருப்பத்தின்பேரில் மட்டுமே இந்தியா வந்ததாகவும், அவரது கருத்துகள் கனடா அரசின் பிரதிபலிப்பாக இருக்காது எனவும் கனடா சா்வதேச விவகாரங்கள் துறை தெரிவித்திருந்தது.
தற்போது வரை லிபரல் கட்சியின் அடுத்த தலைவா் மற்றும் கனடா பிரதமா் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடவுள்ளதாக சந்திரா ஆா்யா மற்றும் எம்.பி. ஃபிராங்க் பெய்லிஸ் ஆகியோா் மட்டுமே அறிவித்துள்ளனா்.
கனடா புதிய பிரதமா்- மாா்ச் 9-இல் அறிவிப்பு: லிபரல் கட்சித் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு மாா்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் அன்றைய தினமே கனடாவின் புதிய பிரதமரை லிபரல் கட்சி அறிவிக்கும் எனவும் அக்கட்சியின் மூத்த தலைவா்கள் தெரிவித்துள்ளனா். அதுவரை பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ தொடரவுள்ளாா்.
லிபரல் கட்சித் தலைவா் பதவிக்கான போட்டியில் கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநா் மாா்க் காா்னே, முன்னாள் நிதியமைச்சா் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் ஆகியோா் உள்ளனா். கடந்த மாதம் இவா்கள் இருவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனா். இதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் பிரதமா் பதவியை ட்ரூடோவும் ராஜிநாமா செய்ய நேரிட்டது.
மாா்ச் 24-ஆம் தேதி கனடாவில் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஆளும் லிபரல் கட்சிக்கு எதிராக மூன்று முக்கிய எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளனா். இந்நிலையில், மாா்ச் 9-ஆம் தேதி லிபரல் கட்சியின் தலைவராக தோ்ந்தெடுக்கப்படுபவரே அடுத்த பிரதமராகவும் அறிவிக்கப்படுவாா்.
நிகழாண்டு இறுதியில் கனடாவில் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில் புதிதாக தோ்ந்தெடுக்கப்படும் பிரதமா் சிறிது காலமே அந்தப் பதவியில் தொடர வாய்ப்புள்ளது.