யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க....
``கனிமவள கொள்ளை ஆதாரத்துடன் புகார் கொடுத்தவர் லாரி ஏற்றிக் கொலை'' -கொதிக்கும் மக்கள்; நடந்தது என்ன?
கனிமவள கொள்ளை -ஆதாரங்களை இணைத்து மனு..
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகில் உள்ள வெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. இவர், மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளராகவும், அ.தி.மு.க-வில் ஒன்றிய பொறுப்பிலும் இருந்து வருகிறார். அதோடு, முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலராகவும் பதவி வகித்திருக்கிறார். அதேபோல், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வந்த இவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வந்தார். குறிப்பாக, திருமயம் தாலுக்காவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்தார். ஆனால், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து இதுபோன்று மனுக்களை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 10 -ம் தேதி ஜகபர் அலி புதுக்கோட்டை கோட்டாட்சியருக்கு கனிம வள கொள்ளை நடப்பதாக மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், சில குவாரிகளின் பெயர்களுடன் பல ஆதாரங்களையும் இணைத்து, `பல நூறு கோடிக்கான கனிம வள கொள்ளை நடந்துள்ளது. அதனை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த 6 பக்க மனுவுடன் பல ஆதாரங்களையும் இணைத்துக் கொடுத்துள்ளார். இந்த சூழலில் தான், கடந்த வெள்ளிக்கிழமை ஜகுபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
407 வாகனம் மோதி மரணம்...
அப்போது அந்த வழியாக சென்ற 407 வாகனம் மோதியதில் ஜகுபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், முதலில் இந்த வழக்கை விபத்தாக திருமயம் போலீஸார் மாற்ற முயல்வதாக, சமூக ஆர்வலர்களும், பல்வேறு கட்சியினரும் குற்றம்சாட்டவே, அதன்பிறகு முருகானந்தம் என்பவர் தனக்கு எதிராக செயல்படும் ஜகுபர் அலியை வாகனம் ஏற்றி கொலை செய்த்தாக ஒப்புக்கொண்டு சரணடைந்ததாக கூறி, அவர்மீது, அவரது டிரைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய முயன்றனர்.
ஆனால், சமூக ஆர்வலர்களும், ஜகபர் அலியின் மனைவி மரியமும் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அந்த வாகனத்தின் உரிமையாளர் முருகானந்தம் உள்ளிட்ட நான்கு பேர்களை கைது செய்துள்ளதாக திருமயம் காவல் நிலைய வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
`நடவடிக்கையும் எடுக்காமல், பலி கொடுத்திருக்கிறார்கள்..'
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனங்களை பதிவு செய்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை,
’கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து ஜகபர் அலி புகார் செய்து, 15 நாள்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள். இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த தி.மு.க கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன?. கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தி.மு.க அரசு.
ஜகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.