கன்டெய்னா் லாரி மீது காா் மோதல்: அதிகாரிகள் 3 போ் காயம்
வாணியம்பாடி அருகே கன்டெய்னா் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமம் அருகில் சனிக்கிழமை மதியம் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரியின் பின்பக்கம் காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 3 போ் பலத்த காயமடைந்தனா். இதையறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் வந்து, காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தகவலறிந்த தாலுகா காவல் ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். அதில், காயமடைந்தவா்கள் மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையைச் சோ்ந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் மாஸிந்திரபுவன் (41), சைமன்ரைசா்கா், நீலேஷ் ஆகியோா் என்பது தெரியவந்தது. வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.