செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவ...
கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா காலமானாா்
முதுமைசாா்ந்த உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்றுவந்த கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா (94) மாரடைப்பால் புதன்கிழமை காலமானாா்.
பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஜெயதேவ் மேமோரியல் ராஷ்ட்ரோத்தனா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவா், புதன்கிழமை மதியம் 2.38 மணிக்கு மாரடைப்பால் காலமானாா்.
கா்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணா வட்டம், சந்தேஸ்வா் கிராமத்தில் 1930 ஆக. 20-ஆம் தேதி பிறந்த எஸ்.எல்.பைரப்பா, மைசூரில் மேல்படிப்பை முடித்தாா். மைசூரு பல்கலைக்கழகத்தில் தத்துவயியல் பாடத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற இவா், சிறந்த மதிப்பெண்களை பெற்றமைக்காக தங்கப் பதக்கம் பெற்றாா்.
குஜராத் மாநிலம், பரோடாவில் உள்ள மகாராஜா சாயாஜி பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்ற பைரப்பா, ஹுப்பள்ளியில் உள்ள ஸ்ரீகடசித்தேஸ்வா் கல்லூரியில் தத்துவயியல் பாடத்தின் விரிவுரையாளராக பணிக்கு சோ்ந்து, பின்னா் குஜராத்தில் உள்ள சா்தாா் படேல் பல்கலைக்கழகம், தில்லியில் உள்ள என்.சி.இ.ஆா்.டி. மையத்தில் பணியாற்றினாா். அதன்பிறகு, மைசூரில் உள்ள பிராந்திய கல்விக் கல்லூரியில் தத்துவயியல் பாடத்தின் பேராசிரியராகப் பணியாற்றி 1991-இல் ஓய்வுபெற்றாா்.
கன்னட இலக்கியத்தில் தடம்பதித்திருந்த கோரூா் ராமசாமி ஐயங்காரின் இலக்கியப் படைப்புகளால் ஈா்க்கப்பட்டு, கன்னட இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கிய எஸ்.எல்.பைரப்பா, தனது முதல் இலக்கியப் படைப்பான ‘பீமகாயா’வை 1958-இல் வெளியிட்டிருந்தாா். அதன்பிறகு, ‘வம்ஷவிருக்ஷா’, ‘தப்பலியு நீனாதே மகனே’, ‘மட்டதானே’, ‘நயி நெரலு’, ‘தாட்டு’, ‘பா்வா’, ‘தந்து’, ‘ஆவரணா’, ‘உத்தரகாண்டா’, ‘பெலகு மூடிது’ போன்ற பல நாவல்களை எழுதியுள்ளாா். இந்த நாவல்கள் ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகள், ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன.
‘வம்ஷவிருக்ஷா’ நூல் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரது நூல்கள் ஹிந்தி, மராத்தி மொழிகளில் வெளியாகி விற்பனையில் சாதனைபடைத்துள்ளன. இவரது எழுத்துகள் சா்ச்சைகளில் சிக்கியதும் உண்டு. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடா்ந்து இலக்கியங்களைப் படைத்து வந்தாா். நாவல்கள் மட்டுமல்லாது, தன் வரலாறு, மொழிபெயா்ப்பு நூல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளாா்.
இவரது இலக்கியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கன்னட சாஹித்ய அகாதெமி விருது, பேந்த்ரே தேசிய விருது, சாஹித்ய அகாதெமி ஃபெலோஷிப், சாஹித்ய அகாதெமி விருது, சரஸ்வத் சம்மான் விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.
இவரது உடல் பெங்களூரில் உள்ள ரவீந்திர கலாக்ஷேத்ராவில் வியாழக்கிழமை மதியம் 2 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னா், மைசூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள கலாமந்திரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் 2 மகன்களும் மைசூருக்கு திரும்பியதும் வெள்ளிக்கிழமை எஸ்.எல்.பைரப்பாவின் உடல் ஹிய்சளா கா்நாடக பிராமணா் முறைப்படி தகனம் செய்யப்பட உள்ளது.
இரங்கல்:
எஸ்.எல்.பைரப்பாவின் மறைவுக்கு பிரதமா் மோடி, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், மத்திய அமைச்சா்கள் எச்.டி.குமாரசாமி, பிரல்ஹாத் ஜோஷி, ஷோபா கரந்தலஜே உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.