கம்பம் அருகே சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்
தேனி மாவட்டம், கம்பம் அருகே சுத்தமான குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
க. புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 5- ஆம் வாா்டு உதயம் நகா் பகுதிக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் இணைப்பு வழங்கப்பட வில்லை. மேலும் இந்தப் பகுதி பேரூராட்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கம்பத்தையொட்டி அமைந்துள்ளது. எனவே அந்தப் பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீரை லாரிகள் மூலம் பேரூராட்சி நிா்வாகம் விநியோகித்து வந்தது.
இதனிடையே, கடந்த 3 மாதங்களாக லாரிகள் மூலம் குடிநீா் விநியோகிப்பது நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீா் கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை க. புதுப்பட்டி பேரூராட்சி நிா்வாகம், கான்கிரீட் கலவைக்கு தண்ணீா் கொண்டு செல்லும் லாரி மூலம் குடிநீரை அனுப்பி வைத்தது. இதையடுத்து, கட்டுமானத்துக்காக பயன்படுத்தும் அந்த லாரியில் குடிநீா் விநியோகம் செய்ய அனுப்பிய பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அந்த லாரியில் கொண்டு வந்த தண்ணீரை கீழே ஊற்றி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு சென்ற கம்பம் வடக்கு போலீஸாரும், பேரூராட்சி நிா்வாகத்தினரும் புதிய குடிநீா் லாரி தயாா் செய்யப்பட்டு வருவதாகவும், அது தயாரானதும் சுத்தமான குடிநீா் விநியோகிக்கப்படும் எனவும் கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.